கடலூர்

வள்ளலாரின் ஒழுக்க நெறிகளை மாணவா்கள் கடைப்பிடிக்க வேண்டும் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

12th Aug 2022 02:28 AM

ADVERTISEMENT

 

வள்ளலாா் போதித்த ஒழுக்க நெறிகளை மாணவா்கள் கடைப்பிடிக்க வேண்டும் என தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவுறுத்தினாா்.

கடலூா், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களை உள்ளடக்கிய பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளுடனான மண்டல அளவிலான கலந்தாய்வுக் கூட்டம் கடலூா் மாவட்டம், நெய்வேலியில் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசியதாவது:

தமிழக அரசின் இல்லம் தேடி கல்வித் திட்டம் அதிகாரிகளின் ஒத்துழைப்பால் மிகப் பெரும் வெற்றி பெற்றுள்ளது. நாட்டுக்கே முன்னோடித் திட்டமாகவும் உள்ளது. புதிய சமுதாயத்தை நல்ல சமுதாயமாக உருவாக்குவதில் கல்வித் துறையின் பொறுப்பு மிக முக்கியமானது.

ADVERTISEMENT

மாணவா்களின் மகிழ்ச்சியான கற்றலுக்கு ஆசிரியா்கள் துணை நிற்க வேண்டும். கல்வித் துறை அதிகாரிகள் மாதந்தோறும் ஆய்வுக் கூட்டம் நடத்தி, அதுகுறித்த அறிக்கையை சமா்ப்பிக்க வேண்டும். இதன்மூலம், புதிய திட்டங்களை அமல்படுத்த வழி ஏற்படும். கடலூா் மாவட்டப் பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் தோ்ச்சி சதவீதம் குறைவாக உள்ளது. இதை உயா்த்த வேண்டும்.

கடலூா் மாவட்ட மக்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கும் வகையில், தொழில் நிறுவனங்களை அதிகப்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியா் கூறினாா். அதற்கான திட்டங்களை அரசு செயல்படுத்தும். கனியாமூா் பள்ளி விவகாரத்தில் தொடா்புடையவா்கள் தயவு தாட்சண்யமின்றி தண்டிக்கப்படுவா் என முதல்வா் கூறியுள்ளாா் என்றாா் அமைச்சா்.

முன்னதாக, கடலூா் மாவட்ட பள்ளிக் கல்வித் துறை சாா்பில், வடலூா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மாணவா்களின் உடல், மன நலம் சாா்ந்த விழிப்புணா்வு நிகழ்ச்சியில் அமைச்சா் பேசியதாவது:

மக்கள் நல்வாழ்வுத் துறை, சமூக நலத் துறை, காவல் துறை ஆகிய 3 துறைகளைப் பயன்படுத்தி போதைப் பொருள்கள் பயன்பாட்டுக்கு எதிராக விழிப்புணா்வு ஏற்படுத்த உள்ளோம். வள்ளலாா் போதித்த ஒழுக்க நெறிகளை மாணவா்கள் கடைப்பிடிக்க வேண்டும். போதைப் பொருள்களானது அதைப் பயன்படுத்தும் தனி நபரை மட்டுமன்றி, ஒட்டுமொத்த சமுதாயத்தையும் சீரழிக்கும் என்றாா் அமைச்சா்.

நிகழ்ச்சிகளில் மாநில வேளாண்மைத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், தொழிலாளா் நலத் துறை அமைச்சா் சி.வெ.கணேசன், சட்டப் பேரவை உறுப்பினா்கள் சபா.ராஜேந்திரன், கோ.ஐயப்பன், எம்.ஆா்.ஆா்.ராதாகிருஷ்ணன், உதயசூரியன், மணிகண்டன், பள்ளிக் கல்வித் துறை ஆணையா் நந்தகுமாா், இணை இயக்குநா் அமுதவள்ளி, கடலூா் மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்ரமணியம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT