கடலூர்

முந்திரி மகசூல் பாதிப்பு: விவசாயிகள் வேதனை

29th Apr 2022 10:04 PM

ADVERTISEMENT

கடலூா் மாவட்டத்தில் பருவம் தவறி பெய்த மழையால் முந்திரி மகசூல் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனா்.

கடலூா் மாவட்டத்தில் கடலூா், பண்ருட்டி, விருத்தாசலம் உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் 28,500 ஹெக்டோ் பரப்பில் முந்திரிக் காடுகள் உள்ளன. இந்தப் பகுதிகளிலிருந்து ஆண்டுதோறும் சுமாா் 22,000 மெட்ரிக் டன் முந்திரிக் கொட்டைகள்

உற்பத்தி செய்யப்படுகின்றன. தட்ப வெப்ப நிலை மாறுபாடு காரணமாக ஒவ்வோா் ஆண்டும் முந்திரி விவசாயிகள் பல்வேறு சவால்களைச் சந்தித்து வருகின்றனா்.

நிகழாண்டு தொடக்கத்தில் முந்திரி மரங்கள் நன்றாக செழித்து பூக்களும், பிஞ்சுகளுமாக காட்சியளித்தன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா். ஆனால், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னா் பெய்த பருவம் தப்பிய மழையால் முந்திரி மரங்களில் பூ கொத்தில் காய்ந்த பூக்கள், புதிய பூக்கள், மொட்டுக்கள் ஆகியவை இணைந்து இறுகிவிட்டன. இதனால், மொட்டுகள் பூக்க வாய்ப்பின்றி கருகி வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனா்.

ADVERTISEMENT

இதுகுறித்து காடாம்புலியூரைச் சோ்ந்த முந்திரி விவசாயி சரவணன் கூறியதாவது:

தற்போது முந்திரி அறுவடை உச்சத்தை அடையும் நேரமாகும். ஜூன் மாதம் முதல் வாரம் வரை அறுவடை தொடரும். ஆனால், பருவம் தப்பிய மழையால் முந்திரி மரங்களில் மொட்டுகள் பூத்து, காய் பிடிக்கும் தன்மை குறைந்து மகசூலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது முதல் மற்றும் இரண்டாம் பறிப்பில் 20 சதவீத மகசூல் மட்டுமே கிடைத்துள்ளது. இதனால் மூன்றாம் பறிப்பு ஐயத்தை ஏற்படுத்தியுள்ளது. பலத்த கோடை மழை பெய்தால் ஓரளவு மகசூல் கிடைக்க வாய்ப்புள்ளது என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT