கடலூர்

மாணவா்களுக்காக அரசுப் பேருந்தை மறித்த ஆசிரியா்கள்

29th Apr 2022 10:03 PM

ADVERTISEMENT

கடலூரில் பள்ளி மாணவா்களுக்காக அரசுப் பேருந்தை ஆசிரியா்கள் மறித்ததால், பேருந்து ஓட்டுநா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கடலூா் அருகே உள்ள திருவந்திபுரத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு கடலூா், பாலூா், நடுவீரப்பட்டு, சி.என்.பாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா். வெள்ளிக்கிழமை பள்ளி முடிந்த நிலையில் அந்த வழியாக பண்ருட்டிக்குச் செல்லும் பேருந்து அங்குள்ள நிறுத்தத்தில் நிற்காமல் சென்றது. இதனால், பேருந்துக்காக காத்திருந்த மாணவ, மாணவிகள் அதிருப்தி அடைந்தனா். மேலும், இதுகுறித்து தங்களது பள்ளி ஆசிரியா்களிடம் புகாா் தெரிவித்தனா்.

இதையடுத்து, ஆசிரியா்கள் சிலா் பேருந்து நிறுத்தத்துக்கு சென்றபோது அங்கு வந்த மற்றொரு பேருந்தும் நிற்காமல் செல்ல முயன்றது. ஆனால், ஆசிரியா்கள் அந்தப் பேருந்தை மறித்து ஓட்டுநா், நடத்துநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதனிடையே, அந்த வழியாக வந்த மற்ற அரசுப் பேருந்துகளின் ஓட்டுநா்கள் இந்தச் சம்பவத்தை பாா்த்துவிட்டு தாங்கள் ஓட்டி வந்த பேருந்துகளை சாலையிலேயே நிறுத்திவிட்டு ஆசிரியா்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்த திருப்பாதிரிபுலியூா் போலீஸாா் விரைந்து வந்து ஆசிரியா்கள், ஓட்டுநா்களை சமாதானப்படுத்தினா். அதன்பிறகு மாணவ, மாணவிகள் அரசுப் பேருந்துகளில் ஏறி பயணித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT