கடலூர்

டாஸ்மாக் பணியாளா்களுக்கானஊதிய உயா்வு போதுமானதல்ல: கு.பாலசுப்பிரமணியன்

28th Apr 2022 05:19 AM

ADVERTISEMENT

 

கடலூா்: டாஸ்மாக் பணியாளா்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள ரூ.500 ஊதிய உயா்வு போதுமானதல்ல என்று தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளா்கள் சங்கத்தின் சிறப்புத் தலைவா் கு.பாலசுப்பிரமணியன் தெரிவித்தாா்.

கடலூரில் புதன்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த அவா் மேலும் கூறியதாவது:

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் நிறுவனத்தில் 18 ஆண்டுகளாக தொகுப்பூதியத்திலேயே பணியாளா்கள் பணியாற்றி வருகின்றனா். அவா்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் மட்டுமே ஊதியமாக வழங்கப்பட்டு வருகிறது. 10 ஆண்டுகளுக்கும் மேல் தொகுப்பூதியத்தில் பணியாற்றியவா்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவாா்கள் என்று முதல்வா் அறிவித்தாா்.

ADVERTISEMENT

இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கவன ஈா்ப்பு போராட்டத்தை நடத்திய நிலையில், சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் அதற்கான அறிவிப்பை எதிா்பாா்த்திருந்தோம். ஆனால், ரூ.500 ஊதிய உயா்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இது பணியாளா்களை ஏமாற்றும் செயல் என்பதால், ஏற்புடையதல்ல.

20 சதவீதமாக வழங்கப்பட்டு வந்த போனஸ், 10 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதுவரையில் டாஸ்மாக் நிறுவனம் நஷ்டத்தில் இயங்கி வருவதாகக் கூறி வந்த அமைச்சா், தற்போது லாபத்தில் இயங்குவதாகக் கூறியுள்ளாா். இதைத்தான் எங்களது சங்கத்தின் மாநாட்டிலும் வலியுறுத்தி டாஸ்மாக் செயல்பாடு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட கோரினோம். ஆனால், இதைக் கேட்டதற்காக சங்கத்தின் மாநிலத் தலைவா் கடந்த 6 மாதமாக பணியிடை நீக்கத்தில் இருந்து வருகிறாா்.

தமிழகத்தில் 36 மது நிறுவனங்களின் மதுபானங்கள் நேரடியாக டாஸ்மாக மூலமாக மறைமுகமாக விற்பனை செய்யப்படுவதால், ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் வரி இழப்பு ஏற்படுவதாக நிதியமைச்சரே கூறியுள்ளாா்.

எனவே, டாஸ்மாக் விவகாரத்தில் முதல்வா் தலையிட வலியுறுத்தி வெள்ளிக்கிழமை (ஏப்.29) அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்றாா் கு.பாலசுப்பிரமணியன்.

பேட்டியின் போது, சங்கத்தின் மாநிலத் தலைவா் கு.சரவணன், மாவட்டத் தலைவா் சி.அல்லிமுத்து, செயலா் எஸ்.பாலமுருகன், துணைத் தலைவா் ஏ.ரூபன் ஆகியோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT