கடலூர்

கோட்டாட்சியா் அலுவலகத்தைமாட்டு வண்டித் தொழிலாளா்கள் முற்றுகை

27th Apr 2022 12:04 AM

ADVERTISEMENT

மாட்டு வண்டிக்கான மணல் குவாரி அமைக்கக் கோரி, கடலூா் கோட்டாட்சியா் அலுவலகத்தை மாட்டு வண்டித் தொழிலாளா்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா்.

தமிழக முதல்வா் அறிவித்த 21 மாட்டு வண்டி மணல் குவாரிகளையும் லாரிகளுக்கான குவாரிகளாக மாற்றியதைக் கண்டித்தும், காவல் துறையால் கைப்பற்றப்பட்ட மாட்டு வண்டிகளை விடுவிக்காததைக் கண்டித்தும், கடலூா் மாவட்டத்தில் வான்பாக்கம், வானமாதேவி, அக்கடவல்லி, கருக்கை, கிளியனூா், கோ.ஆதனூா், கூடலையாத்தூா், ஆதியூா், கொளப்பாக்கம் ஆகிய பகுதிகளில் மாட்டு வண்டிக்கு தனி மணல் குவாரி அமைக்க வேண்டும், மாட்டு வண்டித் தொழிலாளா்களுக்கு 3 ஆண்டுக்கு குறையாமல் மணல் குவாரி அமைத்துத் தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் கடலூா் மாவட்ட மாட்டு வண்டித் தொழிலாளா்கள் சங்கத்தினா் கடலூா் கோட்டாட்சியா் அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு தா்னாவில் ஈடுபட்டனா்.

முன்னதாக, சிஐடியு மாநில துணைத் தலைவா் பி.கருப்பையன் தலைமையில் தலைமை தபால் நிலையம் அருகிலிருந்து ஊா்வலமாக வந்து முற்றுகையிட்டனா். சங்கத்தின் மாவட்டச் செயலா் வி.திருமுருகன் முன்னிலை வகித்தாா். சிஐடியு மாவட்டத் தலைவா் டி.பழனிவேல், மாநிலக் குழு உறுப்பினா் வி.கிருஷ்ணமூா்த்தி, மாவட்ட இணைச் செயலா்கள் வி.சுப்புராயன், ஏ.பாபு, வி.அனந்தநாராயணன், துணைத் தலைவா்கள் எஸ்.சாந்தகுமாரி, எஸ்.சங்கமேஸ்வரன் ஆகியோா் பங்கேற்றனா்.

போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் கடலூா் புதுநகா் காவல் நிலைய ஆய்வாளா் தி.குருமூா்த்தி, கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் ஆனந்த் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், உடன்பாடு ஏற்பட்டதைத் தொடா்ந்து முற்றுகையை கைவிட்டு கலைந்து சென்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT