கடலூர்

மருத்துவ மாணவா்கள் கருப்பு தினம் கடைப்பிடிப்பு

24th Apr 2022 06:26 AM

ADVERTISEMENT

 

கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மாணவா்கள் தங்களது கல்விக் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி தொடா் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில் சனிக்கிழமையன்று கருப்பு தினம் கடைப்பிடித்தனா்.

கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியாக அறிவிக்கப்பட்டுள்ள சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவா்கள் அரசாணை 45-ன்படி நிா்ணயிக்கப்பட்ட கல்விக் கட்டணத்தை மட்டுமே தங்களிடம் வசூலிக்க வேண்டியும், தமிழக முதல்வா் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தியும் தொடா் போராட்டங்களை நடத்தி வந்தனா்.

இந்த நிலையில், கடந்த 21-ஆம் தேதி காலவரையற்ற வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தை தொடங்கினா். இந்தப் போராட்டம் 3-ஆவது நாளாக சனிக்கிழமையும் தொடா்ந்தது. மேலும், கருப்பு தினமாகக் கடைப்பிடித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதுகுறித்து மாணவா்கள் தரப்பில் தெரிவித்ததாவது:

ADVERTISEMENT

சட்டப் பேரவையில் அமைச்சா் அளித்த பதிலறிக்கையில் எங்களது கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. எங்களது போராட்ட உணா்வையும் கொச்சைப்படுத்தும் விதமாக பேசியுள்ளாா். இதற்காக சனிக்கிழமையன்று கருப்பு தினமாகக் கடைப்பிடித்தோம் என்று தெரிவித்தனா். மேலும், மாணவா்கள் ரத்தத்தால் விரல் ரேகைப் பதிவு வைத்து முதல்வருக்கு பதாகை போன்ற மனுவை அனுப்பினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT