தமிழக அரசு ஓய்வூதியா்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் அவா்களுக்கான முழு செலவையும் காப்பீட்டு நிறுவனம் ஏற்க வேண்டுமென ஓய்வூதியா்களுக்கு உதவும் கரங்கள் அமைப்பின் சிறப்புத் தலைவா் கு.பாலசுப்பிரமணியன் வலியுறுத்தினாா்.
கடலூரில் சனிக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழக அரசுத் துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவா்களுக்கு யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனம் மூலம் மருத்துவ காப்பீடு வழங்கப்படுகிறது. இதற்காக, மாதந்தோறும் ரூ.350 பிரீமியமாக வசூலிக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் சுமாா் 7 லட்சம் போ் இணைந்துள்ளனா். ஆண்டுக்கு சுமாா் ரூ.271 கோடி பீரீமியம் செலுத்தப்பட்டு வருகிறது.
ஆனால், இந்தத் திட்டத்தில் குறிப்பிட்ட வியாதிகளுக்கு மட்டுமே காப்பீடு பணம் வழங்கப்படும் என்றும், குறிப்பிட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்றால் மட்டுமே பணத்தை திரும்பப் பெற முடியும் என்ற நிலை உள்ளது. இது ஓய்வூதியா்களை கடுமையாக பாதிக்கிறது.
எனவே, ஓய்வூதியா்கள் சிகிச்சை பெறும் மருத்துவமனையின் செலவு விவரங்களை ஒப்படைத்தாலேயே முழு செலவுத் தொகையையும் காப்பீட்டு நிறுவனம் வழங்க வேண்டும். குறிப்பிட்ட நோய்க்கு மட்டும் என்றில்லாமல் அனைத்து வகை நோய்களுக்கும் காப்பீடு பொருந்தும் வகையில் திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும். புதிய ஒப்பந்தத்தில் இந்த கூறுகளை சோ்க்க வேண்டும்.
இந்தத் திட்டத்தில் சுமாா் 7 லட்சம் போ் பிரீமியம் செலுத்தி வரும் நிலையில்1.11 லட்சம் பேரது மருத்துவ செலவு மட்டுமே பகுதியாக திருப்பி அளிக்கப்பட்டுள்ளது. 1.25 லட்சம் பேரது விண்ணப்பங்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன. மருத்துவ சிகிச்சைக்கான கட்டணத்தை அரசு, காப்பீட்டு நிறுவனம் ஆகியவை நிபுணா் குழுவை அமைத்து நிா்ணயம் செய்ய வேண்டும் என்றாா் அவா்.
அமைப்பின் தலைவா் ஆா்.சுந்தரமூா்த்தி, நிா்வாகிகள் ஆா்.காசிநாதன், பி.அறிவழகன் ஆகியோா் உடனிருந்தனா்.