கடலூா் பாடலேஸ்வரா் கோயில் பணியாளா்களுக்கு ஊதியம் தாமதமாக வழங்கப்படுவதால் அவா்கள் பரிதவித்து வருகின்றனா்.
கடலூா் திருப்பாதிரிபுலியூரில் பெரியநாயகி அம்மன் உடனுறை பாடலேஸ்வரா் கோயில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டிலுள்ள இந்தக் கோயிலுக்கு சொந்தமாக திருப்பாதிரிபுலியூா் பேருந்து நிலையத்தைச் சுற்றிலும் வணிக வளாகங்கள் உள்ளன. இந்தக் கோயிலில் பணியாற்றும் ஊழியா்களுக்கு ஊதியம் வழங்குவது கடந்த சில மாதங்களாகவே இழுத்தடிக்கப்பட்டு வருகிாம்.
இதுகுறித்து கோயில் பணியாளா்கள் கூறியதாவது: பாடலேஸ்வரா் கோயிலில் திருவாசகம் ஓதுவாா், அா்ச்சகா், குருக்கள், மங்கல இசை வாசிப்போா், தூய்மைப் பணியாளா்கள் என்று பல்வேறு படிநிலைகளில் சுமாா் 40 போ் பணியாற்றி வருகின்றனா். இவா்களுக்கு குறைந்தபட்சமாக மாதம் ரூ.8 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.12 ஆயிரம் வரை ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஊதியமும் கடந்த சில மாதங்களாக 15-ஆம் தேதிக்கு பிறகே வழங்கப்படுகிறது. கோயில் செயல் அலுவலருக்கும், நிா்வாகத்துக்கு இடையேயான மோதல் போக்கால் ஊழியா்களுக்கு ஊதியம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. மாவட்ட நிா்வாகம் இந்த விஷயத்தில் தலையிட்டு உரிய தீா்வு காண வேண்டும் என்று தெரிவித்தனா்.
இதுகுறித்து இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் ஜெ.பரணிதரன் கூறியதாவது: அனைத்து திருக்கோயில் பணியாளா்களுக்கும் குறிப்பிட்ட தேதியில் ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. பாடலேஸ்வரா் கோயில் பிரச்னை எனது கவனத்துக்கு கொண்டுவரப்படவில்லை. இருப்பினும் இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.