கடலூர்

கடலூா்: நாளை முதல் மீன்பிடி தடைக் காலம் அமல்

14th Apr 2022 12:06 AM

ADVERTISEMENT

கடலூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (ஏப். 15) முதல் மீன்பிடி தடைக் காலம் அமல்படுத்தப்படும் என்று மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடல் மீன்வளத்தை பாதுகாக்கும் நோக்கத்துடன் தமிழக கிழக்கு கடற்கரை நெடுகிலும் உள்ள பகுதி முழுவதிலும் (திருவள்ளூா் மாவட்டம் முதல் கன்னியாகுமரி மாவட்டம் வரை) ஆண்டுதோறும் மீன்பிடி தடைக் காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, வரும் 15-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) முதல் ஜூன் 14-ஆம் தேதி வரை 61 நாள்களுக்கு நிகழாண்டுக்கான மீன்பிடி தடைக் காலம் அமலாகிறது. இந்த நாள்களில் விசைப் படகுகள், இழுவைப் படகுகள் மூலம் மீன் பிடிப்பதை அரசு தடை செய்துள்ளது.

கடந்த 20 ஆண்டுகளாக அமல்படுத்தப்பட்டு வரும் இந்தத் தடை ஆணையின்படி நிகழாண்டும் மீன்பிடி விசைப்படகுகள், இழுவைப் படகுகள் மூலம் மேற்காணும் தடை செய்யப்பட்ட 61 நாள்களுக்கும் கடலில் சென்று மீன் பிடிக்க வேண்டாம். கடலில் மீன்களின் இன விருத்திக்கு ஏற்ற காலமான மேற்கூறிய 61 நாள்களும் மீன்பிடிப்பதை நிறுத்தி வைப்பதன் மூலம் இடையூறு இல்லாத இனவிருத்தி மேம்பட்டு மீன்வளம் பெருக வாய்ப்புள்ளது. மீனவா்களின் நலன் கருதியே அரசு இந்தத் தடையை வகுத்துள்ளது. எனவே, குறிப்பிட்டுள்ள 61 நாள்கள் முடியும் வரை கடலூா் மாவட்ட மீனவா்கள் விசைப் படகுகள், இழுவைப் படகுகள் மூலம் மீன்பிடிக்க வேண்டாம் என்று அதில் ஆட்சியா் தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT