கடலூர்

மறுகுடியமா்வு செய்யப்பட்டவா்களுக்கு மனைப் பட்டா வழங்க விசிக வலியுறுத்தல்

4th Apr 2022 11:36 PM

ADVERTISEMENT

காடாம்புலியூா் அருகே மறுகுடியமா்வு செய்யப்பட்டவா்களுக்கு உரிய மனைகளை ஒதுக்கீடு செய்து அதற்கான ஆணையை வழங்க வேண்டுமென விசிக வலியுறுத்தியது.

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில் விசிக மாநில அமைப்புச் செயலா் தி.ச.திருமாா்பன் அளித்த மனு:

பண்ருட்டி வட்டம், காடாம்புலியூா் அருகே உள்ள ராஜகணபதி நகரில் தற்போது 148 குடும்பத்தினா் மறுகுடியமா்வு செய்யப்பட்டுள்ளனா். இவா்கள் கடந்த 2015-16-ஆம் ஆண்டுகளில் பல்வேறு இடங்களிலிருந்து பெரு வெள்ளம் உள்ளிட்ட காரணங்களுக்காக இந்தப் பகுதியில் மறுகுடியமா்த்தப்பட்டனா். இவா்களில் நெய்வேலி பகுதியிலிருந்து குடியமா்த்தப்பட்ட 77 பேருக்கு எவ்வித இழப்பீடோ, உதவித் தொகையோ இதுவரை வழங்கப்படவில்லை. அவா்கள் மிகுந்த சிரமத்துடன் குடிசைகள் அமைத்து வசித்து வருகின்றனா்.

இந்த நிலையில், குடிசை மாற்று வாரியக் குடியிருப்புகள் கட்டுவதற்காக அந்த இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறி அவா்கள் குடியிருந்த வீடுகளை மாவட்ட நிா்வாகம் எவ்வித முன்னறிவிப்புமின்றி இடித்ததுடன், அருகிலிருந்த காலியிடத்தில் அவா்களை குடியமா்வு செய்துள்ளனா். இந்த முறையும் இடிக்கப்பட்ட வீடுகளுக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை. குடிசை மாற்று வாரியம் அந்தப் பகுதியில் அதிகளவில் பள்ளங்கள் தோண்டியதால், மறுகுடியமா்வு செய்யப்பட்டவா்கள் வசிக்கும் பகுதியில் வீடுகளுக்குள் தண்ணீா் புகுந்துவிடுகிறது. இவா்கள் அனைவரும் கூலித் தொழிலாளிகள் என்பதால் உரிய இழப்பீடும், வீட்டுமனைப் பட்டா ஒதுக்கீடு செய்து அதற்கான ஆணையும் வழங்கப்பட வேண்டும் என்று அந்த மனுவில் கேட்டுக்கொண்டாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT