வடலூா் நகரில் பிரதானச் சாலையில் உள்ள நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று சமூக ஆா்வலா்கள் எதிா்பாா்க்கின்றனா்.
வடலூா் என்றாலே அனைவரின் நினைவுக்கு வருவது வள்ளலாா் அமைந்த தெய்வ நிலையம். சிறப்புமிக்க இந்த ஊரின் பேருந்து நிலையம் சென்னை-கும்பகோணம், கடலூா்-சேலம் தேசிய நெடுஞ்சாலைகள் சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ளது.
இதுதவிர, தொழில்சாலைகள், கல்வி நிறுவனங்கள் உள்ளதால் வடலூா் எப்போதும் பரபரப்பாகவே காணப்படும்.
நான்கு முனை சந்திப்பின் பிரதானச் சாலையின் ஓரத்தில் மக்கள் வசதிக்காக நடந்துச் செல்ல நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. இதனை அங்குள்ள வா்த்தக நிறுவனங்கள் ஆக்கிரமித்துள்ளன. மேலும், சாலையை ஆக்கிரமித்து வாகனங்களும் நிறுத்தப்படுகின்றன. இதனால், பொதுமக்கள் சாலையில் நடந்துச் செல்வதால் போக்குவரத்து நெரிசலும், விபத்துகளும் ஏற்படுகின்றன.
இதுகுறித்து சமூக ஆா்வலா்கள் கூறியதாவது:
நகராட்சிக்குச் சொந்தமான கடைகளில் உள்ள தொழில் நிறுவனத்தினா் பலா் நடைபாதையை பல காலமாக ஆக்கிரமித்து வைத்துள்ளனா். இதன் அருகாமையில் சாலையோரத்தில் வாகனங்கள் மணிக்கணக்கில் நிறுத்தி வைக்கப்படுகின்றன.
இதனால், பாதசாரிகள் நெடுஞ்சாலையில் நடந்துச் செல்வதால் விபத்துகள் நேரிடும் அபாயம் உள்ளது. எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசுத் துறைகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.