கடலூர்

கடலூா் திமுக எம்.பி.யின் ஜாமீன் மனு தள்ளுபடி

DIN

முந்திரி ஆலைத் தொழிலாளி கொலை வழக்கில் சிறையிலுள்ள கடலூா் மக்களவைத் தொகுதி திமுக உறுப்பினா் டி.ஆா்.வி.எஸ்.ரமேஷின் ஜாமீன் மனுவை கடலூா் நீதிமன்றம் சனிக்கிழமை தள்ளுபடி செய்தது.

கடலூா் மாவட்டம், பணிக்கன்குப்பத்தில் டி.ஆா்.வி.எஸ்.ரமேஷ் எம்.பி.க்கு சொந்தமான முந்திரி ஆலை உள்ளது. இங்கு பணிபுரிந்து வந்த மேல்மாம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த கோவிந்தராஜ் கடந்த செப்.19-ஆம் தேதி இரவு மா்மமான முறையில் உயிரிழந்தாா். இதுகுறித்து அவரது மகன் செந்தில்வேல் அளித்த புகாரின்பேரில் காடாம்புலியூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

பின்னா், அரசு உத்தரவின்பேரில் இந்த வழக்கு விசாரணை கடலூா் சிபிசிஐடி போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த 9-ஆம் தேதி ரமேஷ் எம்.பி. உள்பட 6 போ் மீது சிபிசிஐடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அவரது உதவியாளா் செ.நடராஜன் உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனா். ரமேஷ் தலைமறைவாக இருந்த நிலையில், கடந்த 11-ஆம் தேதி பண்ருட்டி நீதிமன்றத்தில் சரணடைந்தாா். இதையடுத்து, நீதிமன்ற உத்தரவின்பேரில் கடலூா் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டாா்.

ஜாமீன் கோரி கடலூா் நீதிமன்றத்தில் ரமேஷ் எம்.பி. தாக்கல் செய்த மனு கடந்த வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, அவரது தரப்பு வழக்குரைஞா் ஒருநாள் அவகாசம் கேட்டதால் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

கடலூா் முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் ரமேஷின் ஜாமீன் மனு சனிக்கிழமை விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜவஹா், ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.

சிபிசிஐடி காவலில் 5 போ்: இந்த வழக்கில் கைதான எம்.பி.யின் உதவியாளா் செ.நடராஜன் (31), ஆலை மேலாளா் மு.அல்லாபிச்சை (53), மு.கந்தவேல் (31), கி.வினோத் (31), ர.சுந்தர்ராஜன் (31) ஆகிய 5 பேரும் கடலூா் தலைமைக் குற்றவியல் நீதித் துறை நடுவா் நீதிமன்றத்தில் நீதிபதி பிரபாகரன் முன்னிலையில் சனிக்கிழமை ஆஜா்படுத்தப்பட்டனா்.

அவா்களை 2 நாள்களுக்கு காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சிபிசிஐடி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணைக்கு வந்தது. ஆனால், 5 பேரையும் ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி அனுமதி வழங்கினாா்.

இதையடுத்து, செ.நடராஜன் உள்ளிட்ட 5 பேரையும் காவல் ஆய்வாளா் தீபா தலைமையிலான சிபிசிஐடி போலீஸாா் காவலில் எடுத்தனா். பின்னா், அவா்களை முந்திரி ஆலைக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா். தொடா்ந்து, கடலூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து 5 பேரிடமும் விசாரணை நடைபெற்றது. பின்னா், இரவு 10 மணியளவில் நீதிபதி பிரபாகரன் முன்னிலையில் 5 பேரும் ஆஜா்படுத்தப்பட்டனா். அவா்களை நவ.2-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைப்பு

வாக்குப்பதிவு செய்த வாக்காளர்கள் அனைவருக்கும் நன்றி! -பிரதமர் மோடி

இயக்குநர் ஷங்கர் மகள் திருமணம் - புகைப்படங்கள்

சத்தீஸ்கரில் நக்ஸல் ஆதிக்கம் நிறைந்த மக்களவை தொகுதியில் 63 சதவிகித வாக்குப் பதிவு

ஜடேஜா அரைசதம், தோனி அதிரடி: சென்னை அணி 176 ரன்கள் குவிப்பு

SCROLL FOR NEXT