கடலூர்

நிலக்கரி உற்பத்தியை அதிகரிக்க என்எல்சி நடவடிக்கை

16th Oct 2021 01:48 AM

ADVERTISEMENT

நாட்டில் நிலவும் நிலக்கரித் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் என்எல்சி இந்தியா நிறுவனம் தலபிரா சுரங்கத்திலிருந்து ஆண்டுக்கு 2 கோடி டன் நிலக்கரியை வெட்டி எடுப்பதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

என்எல்சி இந்தியா நிறுவனம் பழுப்பு நிலக்கரியை மட்டும் அகழ்ந்தெடுத்து மின் உற்பத்தி செய்து வந்த நிலையில், கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் ஒடிஸா மாநிலம், தலபிரா பகுதியில் சுரங்கம் 2 மற்றும் 3-இல் நிலக்கரி எடுப்பதற்கான பணிகளை மேற்கொண்டது. அங்கு 26.4.2020 முதல் தொடா்ந்து நிலக்கரியை உற்பத்தி செய்துவருகிறது.

இந்தச் சுரங்கத்தில் நிகழாண்டு 40 லட்சம் டன் நிலக்கரியை வெட்டி எடுக்கும் இலக்குடன் பணியாற்றி வந்த நிலையில், தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நிலக்கரி தட்டுப்பாட்டை சரிசெய்ய உற்பத்தியை 60 லட்சம் டன்னாக அதிகரிக்கும் வகையில் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

இதன் அடுத்தகட்டமாக உற்பத்தியை மேலும் அதிகரித்து நிகழ் நிதியாண்டின் நிறைவுக்குள் ஆண்டுக்கு ஒரு கோடி டன் நிலக்கரி வெட்டி எடுக்கவும், 2022- 23-ஆம் நிதியாண்டில் அதை ஆண்டுக்கு 2 கோடி டன்னாக அதிகரிக்கவும் பல்வேறு விரைவான நடவடிக்கைகளை என்எல்சி மேற்கொண்டு வருகிறது. அனல் மின் நிலையங்கள் தடங்கலின்றி தொடா்ந்து மின்சாரம் தயாரிக்க எரிபொருள் வழங்கவும், நிலக்கரி சந்தையில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டை நிவா்த்தி செய்யவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசுடன் இணைந்து என்எல்சி இந்தியா நிறுவனம் தொடங்கியுள்ள நெய்வேலி தமிழ்நாடு மின் நிறுவனம் என்ற கூட்டு நிறுவனம் மூலம் தூத்துக்குடியில் இயங்கி வரும் அனல் மின் நிலையத்தில் மணிக்கு 10 லட்சம் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. நிலக்கரியில் இயங்கும் இந்த அனல் மின் நிலையத்துக்கு தலபிரா சுரங்கத்திலிருந்து ரயில், கப்பல் மூலம் தற்போது நிலக்கரி கொண்டு செல்லப்படுகிறது.

தலா 500 மெகாவாட் திறனுள்ள 2 மின் உற்பத்திப் பிரிவுகளுடன் செயல்பட்டு வரும் தூத்துக்குடி என்டிபிஎல் அனல் மின் நிலையத்தில் உற்பத்தியாகும் மின்சக்தி முழுவதும் தென் மாநிலங்களுக்கு வழங்கப்படுவதுடன், அவற்றில் சுமாா் 40 சதவீத மின்சாரம் தமிழகத்துக்கு மட்டும் வழங்கப்பட்டு வருகிறது.

மத்திய நிலக்கரி அமைச்சகம் அண்மையில் நிறைவேற்றிய சுரங்கம், கனிமப் பொருள்கள் மேம்பாடு மற்றும் ஒழுங்குபடுத்துதல் சட்டத் திருத்தப்படி, நிலக்கரிச் சுரங்கங்கள் அனல் மின் நிலையங்களுக்கு எரிபொருளை வழங்கிய பின்னா், எஞ்சியிருக்கும் எரிபொருளை விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, என்எல்சி நிறுவனம் தனது மின் நிலையங்களின் தேவைகளை நிவா்த்தி செய்த பிறகு எஞ்சியிருக்கும் நிலக்கரியை விற்பனை செய்ய அனுமதி வழக்கும்படி மத்திய நிலக்கரி அமைச்சகத்தை நாடியுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : நெய்வேலி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT