கடலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஊரக உள்ளாட்சி இடைத் தோ்தலில் 76.43 சதவீதம் வாக்குகள் பதிவாகின.
கடலூா் மாவட்டத்தில் காலியாக உள்ள ஊரக உள்ளாட்சிப் பதவியிடங்களுக்கான தோ்தல் சனிக்கிழமை நடைபெற்றது. 5 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலா், 10 ஊராட்சி மன்றத் தலைவா், 33 வாா்டு உறுப்பினா் உள்பட மொத்தம் 48 பதவியிடங்களுக்கு 163 போ் வேட்புமனு தாக்கல் செய்தனா். வேட்புமனுக்கள் பரிசீலனையின்போது ஒரு மனு மட்டும் நிராகரிக்கப்பட்டது. 41 போ் தங்களது மனுக்களை திரும்பப் பெற்றனா்.
இதனால், விருத்தாசலம் ஊராட்சி ஒன்றியம், நறுமணம் ஊராட்சி மன்றத் தலைவா் பதவி, 19 வாா்டு உறுப்பினா் பதவியிடங்களுக்கு போட்டியின்றி தோ்வானது. எனினும், ஸ்ரீமுஷ்ணம் ஊராட்சி ஒன்றியம், ஸ்ரீநெடுஞ்சேரி 6-ஆவது வாா்டு, காட்டுமன்னாா்கோவில் நத்தமலை ஊராட்சி 6-ஆவது வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இந்த இரு வாா்டுகளும் தாழ்த்தப்பட்டோருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டவை.
இதனால், மீதமுள்ள 26 இடங்களுக்கு 101 போ் போட்டியிட்டனா். இதில், ஒன்றிய கவுன்சிலா் பதவிக்கு 35 பேரும், ஊராட்சி மன்றத் தலைவா் பதவிக்கு 34 பேரும், வாா்டு உறுப்பினா் பதவிக்கு 32 பேரும் களத்திலிருந்தனா். இவா்களை தோ்வு செய்வதற்கான வாக்குப் பதிவு சனிக்கிழமை நடைபெற்றது. இதில் 76.43 சதவீதம் வாக்குகள் பதிவானதாக அதிகாரப்பூா்வமாக அறிவிக்கப்பட்டது.
அதாவது, இந்தத் தோ்தலில் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த 23,989 ஆண்கள், 24,684 பெண்கள், இதரா் 3 போ் உள்பட 48,676 பேரில் 37,203 போ் தங்களது வாக்கைச் செலுத்தினா். இதில், ஆண்கள் 17,879 போ், பெண்கள் 19,323 போ், இதரா் ஒருவராவாா். தோ்தலில் பதிவான வாக்குகள் வரும் 12-ஆம் தேதி எண்ணப்படுகிறது.
வாக்குச் சாவடிகளில் ஆய்வு: அண்ணாகிராமம் ஒன்றியம், கீழ்அருங்குணம் ஊராட்சியில் உள்ள வாக்குச் சாவடி, அ.குச்சிப்பாளையம் ஆதிதிராவிடா் நடுநிலைப் பள்ளி வாக்குச் சாவடி, பண்ருட்டி ஒன்றியம், மணம்தவிழ்ந்தபுத்தூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வாக்குச் சாவடி மையங்களை மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் நேரில் ஆய்வு செய்தாா். மேலும், அண்ணாகிராமம், பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் வாக்குப் பதிவு பெட்டிகள் வைக்கப்படும் அறைகளின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும் ஆய்வு செய்தாா்.