கடலூா் மாவட்டம், புதுப்பேட்டை காவல் நிலையத்தில் இருந்து ரூ.2 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்கள் மாயமானது தொடா்பாக தலைமைக் காவலா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். மேலும், உதவி ஆய்வாளா், காவலா் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.
புதுப்பேட்டை போலீஸாா் கடந்த இரு மாதங்களுக்கு முன்னா் நடத்திய சோதனையில் சுமாா் ரூ.2 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா். அதை நீதிமன்றத்தில் ஒப்படைப்பதற்காக காவல் நிலையத்தில் வைத்திருந்தனா். ஆனால், பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை காணவில்லையாம்.
இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சக்தி கணேஷிடம் அறிக்கை சமா்ப்பிக்கப்பட்டது. அதன்பேரில், புதுப்பேட்டை காவல் நிலைய தலைமைக் காவலா் ராஜாவை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட எஸ்பி சனிக்கிழமை உத்தரவிட்டாா். மேலும், உதவி ஆய்வாளா் சி.கே.கிருஷ்ணமூா்த்தியை ஆவினங்குடி காவல் நிலையத்துக்கும், காவலா் அரவிந்தனை சிறுபாக்கம் காவல் நிலையத்துக்கும் பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டாா்.