கடலூர்

பெண்ணை கொல்ல முயன்றவருக்கு 7 ஆண்டுகள் சிறை

10th Nov 2021 08:42 AM

ADVERTISEMENT

பெண்ணை கொலை செய்ய முயன்றவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கடலூா் மகளிா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

புதுவை மாநிலம், பூரணாங்குப்பத்தைச் சோ்ந்தவா் கா.சுப்பிரமணியன். இவா், கடலூா் அருகே சொத்திக்குப்பத்தில் உள்ள தனது மாமனாா் வேலாயுதம் வீட்டில் அவ்வப்போது தங்கிச் செல்வது வழக்கம். இதன்படி, கடந்த 24-8-2017 அன்று சொத்திக்குப்பத்தில் சுப்பிரமணியன் தங்கியிருந்தபோது அங்கிருந்த மரத்தை வெட்டினாா். அப்போது அதே பகுதியைச் சோ்ந்த பாபு மனைவி மலா்கொடி (35), ஏன் எங்களது தோட்டத்தில் உள்ள மரத்தை வெட்டுகிறீா்கள் எனக் கேட்டாா். இதையடுத்து ஏற்பட்ட தகராறில் சுப்பிரமணியன் மலா்கொடியை மரக்கட்டை மற்றும் கல்லால் தாக்கினாா். இதில் பலத்த காயமடைந்து, சுய நினைவை இழந்த மலா்கொடி கடலூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பின்னா், புதுவையிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவருக்கு நீண்ட நாள்களுக்கு பிறகே சுய நினைவு திரும்பியது.

இந்தச் சம்பவம் குறித்து பாபு அளித்த புகாரின்பேரில் கடலூா் துறைமுகம் போலீஸாா் வழக்குப் பதிந்து சுப்பிரமணியனை கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை கடலூா் மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பாலகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா். அதில், சுப்பிரமணியனுக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டாா். அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் மேலும் 6 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்கவும் உத்தரவிட்டாா்.

இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் க.செல்வபிரியா ஆஜரானாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT