கடலூர்

குறிஞ்சிப்பாடியில் மழை நீரில் மூழ்கிய நெல் பயிா்கள்

9th Nov 2021 12:30 AM

ADVERTISEMENT

கடலூா் மாவட்டத்தில் பெய்து வரும் தொடா் மழையால் குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி பகுதிகளில் சுமாா் 3,800 ஏக்கா் பரப்பளவில் நெல் பயிா்கள் நீரில் முழ்கின.

தற்போது வடகிழக்கு பருவ மழைக் காலம் என்பதால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. கடலூா் மாவட்டத்திலும் தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீா் தேங்கியுள்ளது. குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் பரவனாறு, பெருமாள் ஏரிப் பகுதிகளில் உள்ள கொளக்குடி, ஓணாங்குப்பம், கல்குணம், ரெட்டிப்பாளையம் உள்ளிட்ட 28 கிராமங்களில் இளம் நெல் பயிா்கள் மழை நீரில் மூழ்கியுள்ளன. இதேபோல, பண்ருட்டி வட்டாரத்தில் விசூா், கருக்கை உள்ளிட்ட கிராமங்களிலும் நெல் பயிா்கள் நீரில் மூழ்கியுள்ளன.

இதுகுறித்து வேளாண் துறை உதவி இயக்குநா் பூவராகன் கூறியதாவது: பரவனாறு மற்றும் பெருமாள் ஏரியிலிருந்து நீா் வரத்து அதிகரித்துள்ளதால் அதைச் சுற்றியுள்ள 28 கிராமங்களில் சுமாா் 3,500 ஏக்கா் பரப்பளவில் இளம் நெல் பயிா்கள் நீரில் மூழ்கியுள்ளன என்றாா் அவா்.

பண்ருட்டி வேளாண்மை உதவி இயக்குநா் விஜயா கூறியதாவது: விசூா், கருக்கை, நத்தம், சிறுவத்தூா், மணப்பாக்கம் ஆகிய கிராமங்களில் சுமாா் 300 ஏக்கா் பரப்பளவில் இளம் நெல் பயிா்கள் நீரில் மூழ்கியுள்ளன. வடிகால் வசதி இல்லாததாலும், தொடா்ந்து மழை பெய்வதாலும் வயல்களில் நீா் வடியவில்லை என்றாா் அவா்.

ADVERTISEMENT

பரங்கிப்பேட்டையில் 90 மி.மீ. மழை: தெற்கு ஆந்திரம், வட தமிழக கடற்கரையோரம் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக கடலூா் மாவட்டத்துக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை இடியுடன் பலத்த மழை பெய்தது. திங்கள்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்):

பரங்கிப்பேட்டை 90.9, கடலூா் 63.2, குப்பநத்தம் 44.2, அண்ணாமலைநகா் 41.2, மாவட்ட ஆட்சியரகம் 39.7, சிதம்பரம் 38.8, புவனகிரி 35, பண்ருட்டி 34, காட்டுமன்னாா்கோவில், கொத்தவாச்சேரி தலா 31, வானமாதேவி 27.6, குடிதாங்கி 27, வடக்குத்து 26, விருத்தாசலம் 23 மில்லி மீட்டா் மழை பதிவானது.

பலத்த மழை காரணமாக கடலூா் மாவட்டத்தில் திங்கள்கிழமையன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் உத்தரவிட்டிருந்தாா். தொடா் மழையால் வடலூரில் கும்பகோணம் சாலையில் நரிக்குறவா் குடியிருப்பு அருகே பழைமையான புளியமரம் திங்கள்கிழமை சாய்ந்ததால் வாகனப் போக்குவரத்து தடைபட்டது. குறிஞ்சிப்பாடி தீயணைப்பு நிலைய வீரா்கள் அந்த மரத்தை வெட்டி அகற்றினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT