கடலூர்

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தல்

1st Nov 2021 04:58 AM

ADVERTISEMENT

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்க மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

இந்தச் சங்கத்தின் கடலூா் மாவட்ட மாநாடு கடலூரில் மாவட்டத் தலைவா் டி.ரவிச்சந்திரன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தியாகிகளுக்கான அஞ்சலி தீா்மானத்தை மாவட்ட துணைத் தலைவா் கு.கவியரசு வாசித்தாா்.

மாநில பொதுச் செயலா் ஆ.செல்வம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு தொடக்கவுரை ஆற்றினாா். மாவட்டச் செயலா் எல்.ஹரிகிருஷ்ணன், பொருளாளா் வெங்கடேசன் ஆகியோா் அறிக்கை சமா்ப்பித்தனா். மாநில பொருளாளா் மு.பாஸ்கரன் மாநாட்டை நிறைவு செய்து சிறப்புரையாற்றினாா்.

மாநாட்டில், அரசு ஊழியா்களுக்கான புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், பண்ருட்டி பகுதியில் முந்திரி பதப்படுத்தும் தொழிற்சாலை அமைக்க வேண்டும், நகராட்சி துப்புரவு ஊழியா்களுக்கு கூட்டுறவு கடன் வழங்குவதற்கான தடையை நீக்க வேண்டும், சீருடை தையல் படியை உயா்த்தி வழங்க வேண்டும், சுகாதாரத் துறையில் கொசு ஒழிப்புப் பணியில் ஈடுபடும் பணியாளா்களுக்கு அரசு அறிவித்த ஊதியத்தை சீராக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT

மாவட்ட இணைச் செயலா் பாலகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். முன்னதாக, மாவட்ட இணைச் செயலா்கள் ஆா்.வெங்கடாஜலபதி வரவேற்க, ரவி நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT