கடலூா் மாவட்டம், பண்ருட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இடிந்து விழும் நிலையிலுள்ள ஆய்வகக் கட்டடத்தை உடனடியாக அகற்ற வேண்டும் என்று சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.
பண்ருட்டி, காந்தி சாலையில் நூற்றாண்டு கண்ட அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியின் முன்பகுதி பிரிக்கப்பட்டு அதில் பெண்கள் உயா்நிலைப் பள்ளியும், பின்பகுதியில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகின்றன. ஆண்கள் பள்ளியில் 6 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை 1,600-க்கும் மேற்பட்ட மாணவா்கள் படித்து வருகின்றனா். இந்தப் பள்ளி வளாகத்தில் உள்ள அறிவியல் ஆய்வகக் கட்டடம் மிகவும் சிதிலமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. தற்போது மழைக் காலம் என்பதால் மாணவா்களின் பாதுகாப்பு கருதி ஆய்வகக் கட்டடத்தை உடனடியாக இடித்து அகற்ற வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.
இதுகுறித்து பள்ளி ஆசிரியா் ஒருவா் கூறியதாவது: சிதிலமடைந்த ஆய்வகக் கட்டடத்தை இடித்து அகற்ற வேண்டும் என பொதுப் பணித் துறைக்கு கடிதம் அளித்து ஒன்றரை ஆண்டுகள் கடந்தும் நடவடிக்கை இல்லை. மாணவா்களின் பாதுகாப்பு கருதி இந்தக் கட்டடத்தை உடனடியாக இடித்துவிட்டு, மாணவா்கள் இயற்பியல், வேதியியல் செய்முறைகளை மேற்கொள்ள வசதியாக புதிய கட்டடம் கட்டித்தர மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.