கடலூர்

ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 46ஆவது நாளாக போராட்டம்

23rd Jan 2021 08:12 PM

ADVERTISEMENT

ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்களின் போராட்டம் இன்று 46ஆவது நாளை எட்டியுள்ளது.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலை கழகத்திற்கு உட்பட்ட ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கடந்த 2013 ஆம் ஆண்டு அரசுடமையாக்க முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இந்தநிலையில் கடந்த சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடலூர் மாவட்ட அரசு மருத்துவமனையாக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை அறிவித்திருந்தார்.

ஆனால் மருத்துவப் படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு அரசு மருத்துவ கல்லூரிகளில் வசூலிக்கப்படும் தொகையைவிட தனியார் மருத்துவக் கல்லூரிக்கு நிகரான தொகையை அண்ணாமலை பல்கலைக்கழக நிர்வாகம் வசூலித்து வருவதாக இன்று 46ஆவது நாளாக தொடர்ந்து மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

இந்த நிலையில் கல்லூரி நிர்வாகம் சார்பில் காலவரையற்ற மருத்துவக் கல்லூரி விடுமுறை விடப்பட்டுள்ளதாக கல்லூரி நிர்வாகம் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு அறிக்கை வெளியிட்டது. இருந்தாலும் மருத்துவ மாணவர்கள் தங்களது நியாயமான கோரிக்கையை முன்னிறுத்தி தொடர்ந்து போராட்டத்தை நடத்தி வரும் நிலையில் விடுதிகளில் தங்கி உள்ள மருத்துவ மாணவர்கள் விடுதிகளை விட்டு வெளியேற வேண்டும் எனவும் உணவு வழங்கப்படாது எனவும் கல்லூரி நிர்வாகம் தெரிவித்திருந்தது. அதனை மீறி ஹோட்டல்களில் உணவு வாங்கிவந்து மாணவர்கள் சாப்பிட்டுவிட்டு தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர்.

ADVERTISEMENT

ஆனால் இன்று காலையிலிருந்து விடுதிகளில் மின்சாரம் மற்றும் குடிநீர் வழங்குவதை கல்லூரி நிர்வாகம் முற்றிலும் நிறுத்தி விட்டதால் காலையிலிருந்து தொடர்ந்து விடுதி முன்பு வாளிகளை வைத்து தரையில் அமர்ந்து மருத்துவ மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

மற்ற அரசு மருத்துவ கல்லூரிகளில் வசூலிக்கும் கட்டணத்தை கடலூர் மாவட்ட மருத்துவமனையாக அறிவிக்கப்பட்ட ராஜா முத்தையா மருத்துவமனை மருத்துவக் கல்லூரியிலும் வசூலிக்க வேண்டும் என்பது மருத்துவ கல்லூரி மாணவர்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது. மேலும் தற்போது மருத்துவ மாணவர்கள் தங்கியிருக்கும் விடுதிகளில் இருந்து மருத்துவக் கல்லூரிக்கு வரும் நுழை வாயிலை கல்லூரி நிர்வாகம் பூட்டு போட்டு பூட்டி உள்ளதால் நுழைவு வாயிலிலும் மருத்துவ மாணவர்கள் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கல்லூரி வளாகம் முழுவதும் போராட்ட களமாக மாறியுள்ளது.

Tags : Cuddalore
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT