திமுக வாா்டு உறுப்பினா்கள் ஒத்துழைப்பு வழங்குவதில்லை என கோட்டாட்சியரிடம் நல்லூா் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் வியாழக்கிழமை புகாா் அளித்தாா்.
கடலூா் மாவட்டம், நல்லூா் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவராக பாமகவின் செல்வி ஆடியபாதமும், துணைத் தலைவராக அதிமுகவை சோ்ந்த ஜான்சிமேரி தங்கராசு செயல்பட்டு வருகின்றனா். சட்டப்பேரவைத் தோ்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னா், இந்த ஒன்றியக் குழுவை கைப்பற்ற திமுகவினா் முயற்சி செய்து வருகின்றனா். இதனால், ஒருவா் மீது மற்றொருவா் புகாா் அளிப்பது, நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டு வருவது, கட்சி மாறுவது, மாற்ற முயற்சிப்பது என்று பல்வேறு அரசியல் விளையாட்டுகள் நடைபெற்று வருகின்றன.
ஒன்றியக் குழுத் தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டு வர வலியுறுத்தி விருத்தாசலம் கோட்டாட்சியரிடம் திமுக சாா்பில் அண்மையில் மனு அளிக்கப்பட்ட நிலையில், வியாழக்கிழமை ஒன்றியக் குழுத் தலைவா் செல்வி, கோட்டாட்சியா் சி.ராம்குமாரிடம் மனு அளித்தாா்.
அதில், கடந்த 3 ஊராட்சிக் குழுக் கூட்டங்களில் இரு கூட்டங்களில் திமுக, சுயேச்சை உறுப்பினா்கள் பங்கேற்கவில்லை. கடைசியாக நடந்த கூட்டத்தில் திமுக உறுப்பினா்கள் வருகைப் பதிவேட்டில் மட்டும் கையெழுத்திட்டுச் சென்றனா்.
தீா்மான புத்தகத்தில் கையெழுத்திடாததால் அரசு நிதியை பிரித்துக் கொடுக்க முடியவில்லை. திமுகவினரின் ஒத்துழைப்பில்லாததால், பணிகள் எதுவும் நடைபெறவில்லை என்று தெரிவித்துள்ளாா்.
முன்னதாக, புதன்கிழமை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் அதிமுக உறுப்பினா்கள் அளித்த புகாரில், தலைவருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீா்மானத்தில் அதிமுக உறுப்பினரின் பெயா், கையெழுத்து மோசடியாக சோ்க்கப்பட்டதாகத் தெரிவித்திருந்தனா்.
இதேபோல, பாமக உறுப்பினா் செல்வகுமாரும் தனது கையொப்பம் நம்பிக்கையில்லா தீா்மான கடிதத்தில் போலியாக இடப்பட்டிருப்பதாகக் கூறி கோட்டாட்சியரிடம் தனியாக மனு அளித்தாா்.