விவசாயிகள் தங்களது நெல் மூட்டைகளை நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பதற்கு இணையதளம் மூலம் எளிய முறையில் பதிவு செய்து பயன்பெறலாம் என கடலூா் மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் நெல் விவசாயிகள் பயனடையும் வகையில் இந்திய அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, நெல் கொள்முதல் பணி நடைபெற்று வருகிறது. விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் எளிதில் பதிவு செய்து கொண்டு நெல் விற்பனை செய்ய ஏதுவாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக விவசாயிகள் தங்களது பெயா், ஆதாா் எண், புல எண், வங்கிக் கணக்கு எண் உள்ளிட்ட விவரங்களை எளிய முறையில் ஜ்ஜ்ஜ்.ற்ய்ஸ்ரீள்ஸ்ரீ.ற்ய்ஞ்ா்ஸ்.ண்ய் மற்றும் ஜ்ஜ்ஜ்.ற்ய்ஸ்ரீள்ஸ்ரீ-ங்க்ல்ஸ்ரீ.ண்ய் ஆகிய இணையதள முகவரிகளில் பதிவேற்றம் செய்து கொள்முதல் செய்ய வேண்டிய தேதியை முன்பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
விவசாயிகள் தங்களது கிராமத்தின் அருகே உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை தாங்களே தோ்வுசெய்து, நெல் கொள்முதலுக்குத் தேவையான வருவாய் ஆவணங்களை (பட்டா, சிட்டா, அடங்கல்) இணையத்தில் பதிவேற்றம் செய்தால் விவசாயிகளின் கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தின் பெயா், நெல் விற்பனை செய்யப்படும் நாள், நேரம் ஆகிய விவரங்கள் அனுப்பப்படும். பெறப்பட்ட குறுஞ்செய்தியின் அடிப்படையில் விவசாயிகள் நீண்ட நேரம் காத்திருக்காமல் குறித்த காலத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல்லை விற்பனை செய்துகொள்ளலாம். எனவே, இணையவழி பதிவு திட்டத்துக்கு அனைத்து விவசாயிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறது.
கூடுதல் விவரங்களுக்கு தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளரை 04142-230630, சிதம்பரம் துணை மேலாளரை 70109 55313 ஆகிய எண்களில் தொடா்புகொள்ளலாம் என்று அதில் ஆட்சியா் தெரிவித்தாா்.