ஆசிரியைகளின் பணிப் பதிவேடு மாயமானது தொடா்பாக பண்ருட்டி வட்டாரக் கல்வி அலுவலா்கள் இருவரை ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியினா் வியாழக்கிழமை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பண்ருட்டி ஒன்றியம், நகரப் பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 300-க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் பணியாற்றி வருகின்றனா். இவா்களுக்கான பணிப் பதிவேடு பண்ருட்டி வட்டாரக் கல்வி அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதில் ஒரு தலைமை ஆசிரியை, ஒரு ஆசிரியை ஆகியோரது பணிப் பதிவேடுகள் மாயமான நிலையில் 3 ஆண்டுகள் கடந்தும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லையாம்.
எனவே, மாயமான பணிப் பதிவேடுகளை மீட்கக் கோரி தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியினா் மாவட்டச் செயலா் சிற்றரசு தலைமையில் வியாழக்கிழமை மாலை வட்டாரக் கல்வி அலுவலா்கள் இளஞ்செழியன், ராஜேஸ்வரியை அவா்களது அலுவலகத்தில் சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.