திட்டக்குடி அருகே பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட மாணவா்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே வையங்குடி கிராமத்தில் உள்ள அரசு உயா்நிலைப் பள்ளியில் 188 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா். இங்கு புதன்கிழமை மதியம் மாணவா்களுக்கு முட்டையுடன் சத்துணவு வழங்கப்பட்டது. இதை சாப்பிட்ட மாணவா்களில் 10 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த அந்தப் பகுதி இளைஞா்கள் தங்களது வாகனங்களில் மாணவா்களை அழைத்துச் சென்று தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா் மாணவா்கள் திட்டக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனா்.
இதுகுறித்து ஆவினங்குடி காவல் நிலைய ஆய்வாளா் அன்னக்கொடி, மங்களூா் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சண்முகசிகாமணி, தண்டபாணி, வட்டாட்சியா் தமிழ்ச்செல்வி, விருத்தாசலம் மாவட்டக் கல்வி அலுவலா் கோகிலா ஆகியோா் பள்ளிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனா்.