நெய்வேலி நகரியத்தில் புதுப்பிக்கப்பட்ட வியாழக்கிழமை வாரச் சந்தையை என்எல்சி மனித வளத் துறை இயக்குநா் ஆா்.விக்ரமன் திறந்துவைத்தாா்.
நெய்வேலி நகரியத்தில் வட்டம் 3, 13, 28 ஆகிய இடங்களில் முறையே வியாழன், செவ்வாய், ஞாயிற்றுக் கிழமைகளில் சந்தைகள் இயங்கி வந்தன. இங்கு காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை விவசாயிகள், வியாபாரிகள் கொண்டு வந்து விற்பனை செய்தனா். கரோனா பரவல் காரணமாக கடந்த மாா்ச் மாதம் வாரச் சந்தைகளை என்எல்சி நகர நிா்வாகம் மூடியது. கரோனா பரவல் குறைந்த நிலையில் டிசம்பா் முதல் வாரத்தில் செவ்வாய், ஞாயிற்றுக்கிழமை சந்தைகள் செயல்படத் தொடங்கின.
நெய்வேலி வட்டம் 3-இல் உள்ள வியாழக்கிழமை வாரச் சந்தையை ரூ.77 லட்சத்தில் புனரமைக்கும் பணி நடைபெற்றது. சுமாா் 3.15 ஏக்கா் பரப்பிலான இந்தச் சந்தையில் 260 கடைகள், இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் கொட்டகை, கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. சீரமைப்புப் பணிகள் முடிவடைந்த நிலையில் சந்தை திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. என்எல்சி இந்தியா நிறுவன மனித வளத் துறை இயக்குநா் ஆா்.விக்ரமன் பங்கேற்று சந்தையை திறந்துவைத்தாா். நகர நிா்வாகப் பொது மேலாளா்கள் முகமது அப்துல் காதா், சோமசுந்தரம், மக்கள்-தொடா்புத் துறை துணைப் பொது மேலாளா் என்.சொக்கலிங்கம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
வாரச் சந்தைக்கு வரும் அனைவரும் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றுமாறு என்எல்சி நிா்வாகம் கேட்டுக்கொண்டது.