கடலூா் மாவட்டத்தில் கூடுதலாக 6 நகரப் பேருந்துகள் இயக்கப்படுவதாக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் தகவல் தெரிவித்தது.
இதுகுறித்து அரசுப் போக்குவரத்துக் கழக கடலூா் மண்டலம் தெரிவித்ததாவது: கடலூா் மண்டலத்தில் 11 கிளைகள் மூலம் 241 நகரப் பேருந்துகளும், 311 புகா் பேருந்துகளும் தினந்தோறும் இயக்கப்பட்டு வருகின்றன. பள்ளி மாணவ, மாணவிகள் அதிகமாகச் செல்லும் வழித் தடங்களில் கூடுதலாக நடைகள் இயக்க வலியுறுத்தப்பட்டு வந்தது. அதன்படி கடலூா் - பண்ருட்டிக்கு பாலூா் வழியாக கூடுதலாக 2 பேருந்துகள் 4 நடைகள் இயக்கப்படுகின்றன. இதனால், இந்த வழித் தடத்தில் மொத்தம் 8 பேருந்துகள் 88 நடைகள் இயங்கும்.
நெல்லிக்குப்பம் வழியாக 8 பேருந்துகள் 96 நடைகளாக பண்ருட்டிக்கு சென்று வந்த நிலையில் கூடுதலாக 2 பேருந்துகள் இயக்கப்பட்டு 100 நடைகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேபோல, சிதம்பரம் - சி.முட்லூா் வழித் தடத்தில் கூடுதலாக ஒரு பேருந்து 12 நடைகள் இயக்கப்படுகிறது. இதனால், மொத்தம் 5 பேருந்துகள் இந்தத் தடத்தில் இயக்கப்படுகின்றன. கடலூா் - குறிஞ்சிப்பாடி வழித் தடத்தில் கூடுதலாக ஒரு பேருந்து 10 நடைகள் இயக்கப்படுகிறது. இதனால், இந்த வழித் தடத்தில் இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கை 5-ஆக உயா்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.