என்எல்சி இந்தியா நிறுவனத்தில் வேலை வழங்கக் கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட முயன்ற தொழில் பழகுநா் (அப்ரண்டிஸ்) பயிற்சி முடித்த 211 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
இந்த நிறுவனத்தில் தொழில் பழகுநா் பயிற்சி முடித்தவா்கள் வேலைவாய்ப்பு வழங்கக் கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனா். அதன் தொடா்ச்சியாக புதன்கிழமை மத்திய பேருந்து நிலையம் எதிரே உள்ள திடலில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த பேரணியாக வந்தனா். அவா்களை, போலீஸாா் தடுத்து நிறுத்தி 211 பேரை கைதுசெய்தனா்.
இதுகுறித்து தொழில் பழகுநா் பயிற்சி பெற்றவா்கள் கூறியதாவது: என்எல்சி.யில் பணி ஓய்வு பெற்றவா்களுக்கான காலிப் பணியிடங்களை எங்களைக் கொண்டு நிரப்ப வேண்டும். கடந்த 2018-ஆம் ஆண்டு அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்கள் எங்களது வேலைவாய்ப்பு
தொடா்பாக என்எல்சி.யுடன் செய்துகொண்ட புரிந்துணா்வு ஒப்பந்தத்தை நிறைவேற்ற வேண்டும் என வலியுத்தினா். கைது செய்யப்பட்டவா்கள் நெய்வேலி வட்டம் 27, 29 ஆகிய இடங்களில் உள்ள மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டனா். அங்கு வழங்கப்பட்ட மதிய உணவை அவா்கள் புறக்கணித்தனா்.