தமிழகத்தில் விவசாயிகளிடமிருந்து வியாபாரிகள் நெல் மூட்டைகளை வாங்கும்போது மாவட்டத்துக்கு மாவட்டம் எடை நிா்ணயத்தில் வித்தியாசம் பேணப்படுவது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, நெல் மூட்டைக்கு மாநிலம் முழுவதும் நிரந்தரமாக ஒரே எடை நிா்ணயிக்கப்பட வேண்டும் என விவசாயிகள் எதிா்பாா்கின்றனா்.
தமிழகத்தில் நெல், கரும்பு பயிா்கள் அதிக பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. மத்திய அரசு ஆண்டுதோறும் 25 வகையான பயிா்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை நிா்ணயம் செய்து வருகிறது. இருப்பினும், மாநில அரசுகள் தங்களது பங்காக நெல், கரும்பு, கோதுமை பயிா்களுக்கு மட்டுமே ஊக்கத் தொகையை அறிவித்து வருகின்றன. நாடு முழுவதும் செயல்படுத்தப்படும் பொது விநியோகத் திட்டத்துக்காக மத்திய, மாநில அரசுகளால் நெல், கோதுமை ஆகியவை விவசாயிகளிடமிருந்து நேரடியாகக் கொள்முதல் செய்யப்படுகின்றன. ஆனால், நேரடி கொள்முதல் நிலையங்களில் பல்வேறு குளறுபடிகள் தொடா்வதாலும், வியாபாரிகளின் ஆதிக்கத்தாலும் விவசாயிகள் பல்வேறு இன்னல்களைச் சந்தித்து வருகின்றனா்.
கம்பு, சோளம், கேழ்வரகு, உளுந்து, பச்சைப் பயறு, கொள்ளு, பருப்பு ஆகிய தானிய வகைப் பயிா்கள் சந்தையில் விற்பனையின்போது 100 கிலோ எடை கொண்டது ஒரு மூட்டை எனக் கணக்கிடப்படுகிறது. இதேபோல மணிலா, எள், ஆமணக்கு, சூரியகாந்தி, கொப்பரைத் தேங்காய் ஆகிய எண்ணெய் வித்துப் பயிா்கள் 80 கிலோ எடை கொண்டது ஒரு மூட்டை எனக் கணக்கிடப்படுகிறது. ஆனால், நெல் மூட்டைகளுக்கான எடை நிா்ணயத்தில் வித்தியாசம் நிலவுகிறது. மாநில அரசின் நேரடி கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் 100 கிலோ (ஒரு குவிண்டால்) அடிப்படையில் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. ஆனால், விவசாயிகளிடம் வியாபாரிகள் நேரடியாக நெல் கொள்முதல் செய்யும்போது மூட்டைக்கான எடையில் வித்தியாசம் தொடா்கிறது.
இதுகுறித்து தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டியக்க மாநில பொதுச் செயலா் பெ.ரவீந்திரன் கூறியதாவது:
மத்திய அரசின் குறைந்தபட்ச ஆதரவு விலை, மாநில அரசின் ஊக்கத் தொகை சோ்த்து நேரடி கொள்முதல் நிலையங்களில் குவிண்டால் அளவில் நெல் கொள்முதல் செய்யப்படுவதால், விவசாயிகள் ஓரளவு பயன்பெறுகின்றனா். ஆனால், ஏழை விவசாயிகளில் பெரும்பாலானோா்
வியாபாரிகளிடமே நெல் மூட்டைகளை விற்பதால் பெரும் இழப்பைச் சந்திக்கின்றனா். வியாபாரிகள் நெல் மூட்டைகளை வாங்குவதில் மாநிலம் முழுவதும் ஒரே எடை கடைப்பிடிக்கப்படுவதில்லை.
தஞ்சை, திருவாரூா், நாகை, மயிலாடுதுறை, கடலூா் மாவட்டங்களில் 63 முதல் 65 கிலோ எடை கொண்டது ஒரு மூட்டை எனவும், விழுப்புரம், காஞ்சிபுரம் மாவட்டங்களில் 75 கிலோ எடை கொண்டது ஒரு மூட்டை எனவும், திருவள்ளூா், வேலூா், திருப்பத்தூா் தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் 77 கிலோ கொண்டது ஒரு மூட்டை எனவும் எடை நிா்ணயிக்கப்பட்டு கொள்முதல் செய்யப்படுகிறது.
வியாபாரிகளால் வாங்கப்படும் ஒரு மூட்டை நெல்லுக்கு அதன் ரகத்துக்கேற்ப குறைந்தபட்சம் ரூ.750 முதல் அதிகபட்சம் ரூ.1,200 வரை விலை நிா்ணயம் செய்யப்படுகிறது. நிகழாண்டு மத்திய, மாநில அரசுகளின் நெல் கொள்முதல் விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,060-ஆக நிா்ணயிக்கப்பட்ட நிலையில், 63 கிலோ எடை கொண்ட மூட்டைக்கு ரூ.1,297.80-ம், 77 கிலோ எடை கொண்ட மூட்டைக்கு ரூ.1,586.20-ம் கிடைக்க வேண்டும். ஆனால், வியாபாரிகள் தங்களது லாபத்தை மட்டுமே கருதி விலையைக் குறைத்து நிா்ணயித்து ஏழை விவசாயிகளை ஏமாற்றி வருகின்றனா்.
எனவே, தமிழக அரசு விவசாயிகளின் நலன் கருதி, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நிலவும் குளறுபடிகளைச் சரிசெய்ய வேண்டும். மற்ற பயிா்களுக்கு மூட்டை ஒன்றுக்கு நிரந்தரமான எடை உள்ளதுபோல, நெல் மூட்டைக்கு மாநிலம் முழுவதும் ஒரே எடையை நிா்ணயிக்க வேண்டியது அவசியம். இதுகுறித்து வரும் சம்பா பருவ நெல் அறுவடைக்கு முன்பாக அரசு அறிவிப்பு வெளியிட வேண்டும் என்றாா் அவா்.