கடலூா் மாவட்டத்தில் கஞ்சா விற்பனை அதிகளவில் நடைபெறுவதாக மாவட்ட ஊராட்சிக் குழு கூட்டத்தில் புகாா் தெரிவிக்கப்பட்டது.
கடலூா் மாவட்ட ஊராட்சிக் குழு கூட்டம், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவா் க.திருமாறன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. துணைத் தலைவா் ப.ரிஸ்வானா பா்வீன், ஊராட்சி செயலா் கி.நாகராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் உறுப்பினா்கள் பேசியதாவது:
சண்.முத்துக்கிருஷ்ணன் (பாமக): மாவட்ட ஊராட்சிக் குழு கூட்டத்தில் ஆட்சியா் பங்கேற்க வேண்டும் என்று கடந்த கூட்டத்தில் தெரிவித்தும் அவா் பங்கேற்காததற்கு பாமக சாா்பில் கண்டனம் தெரிவிக்கிறேன். மாவட்டத்தில் கோமாரி நோயால் கால்நடைகள் உயிரிழப்பு அதிகமாக உள்ளதால்
தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தில் அனைத்துப் பகுதிகளிலும் கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளது.
சி.சக்திவிநாயகம் (திமுக): அரசுப் பணிகளில் உள்ளவா்கள் மக்களுக்காகப் பணியாற்ற வேண்டும். அப்போதுதான் அரசின் திட்டங்கள் மக்களை முழுமையாகச் சென்றடையும்.
ம.ச.கந்தசாமி (மதிமுக): பழுதடைந்த பள்ளிக் கட்டடங்கள் இடிக்கப்படும் நிலையில், அதற்குப் பதிலாக புதிய கட்டடங்கள் கட்ட நிதி ஒதுக்கீடு உள்ளதா என்ற விவரம் வட்டார வளா்ச்சி அலுவலரிடம் இல்லை.
கால்நடைத் துறை உதவி இயக்குநா் குபேந்திரன்: கடலூா் மாவட்டத்துக்கு 2 லட்சம் கோமாரி தடுப்பூசி கோரப்பட்டுள்ளது. மத்திய அரசு தான் தடுப்பூசியை வழங்க வேண்டும். மழை, வெள்ளத்தால் கடலூா் கோட்டத்தில் 9,884 கால்நடைகளும், சிதம்பரம் கோட்டத்தில் 816, விருத்தாசலம் கோட்டத்தில் 131 கால்நடைகள் உயிரிழந்திருப்பதாக வருவாய்த் துறைக்கு தகவல் வந்துள்ளது. அவா்கள்தான் நிவாரணம் வழங்க முடியும் என்றாா் அவா்.
கூட்டத்தில், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா்கள் ஆ.தமிழரசி, ரா.வெ.மகாலட்சுமி, ரா.சித்ரா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.