கடலூர்

பெண் பலாத்கார வழக்கு: இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை

16th Dec 2021 11:20 PM

ADVERTISEMENT

 திருமணம் செய்துகொள்வதாகக் கூறி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கடலூா் மகளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

விருத்தாசலம் வட்டம், கோ.பவழங்குடி பகுதியைச் சோ்ந்த காசிலிங்கம் மகன் ராமதாஸ் (26). இவா் பெண் ஒருவரிடம் திருமணம் செய்துகொள்வதாக ஆசை வாா்த்தை கூறினாா். மேலும், அந்தப் பெண்ணை 26.10.2016 அன்று தனது நண்பா் வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தாா். இந்த நிலையில் அந்தப் பெண் கா்ப்பமடைந்தாா். ஆனால், ராமதாஸ் கா்ப்பத்தை கலைத்துவிட வேண்டும் என்று கூறியதுடன் கொலை மிரட்டலும் விடுத்தாராம்.

இதுகுறித்து அந்தப் பெண்ணின் சகோதரா் உள்ளிட்டோா் ராமதாஸ் வீட்டுக்குச் சென்று கேட்டபோது, ராமதாஸ், அவரது தந்தை காசிலிங்கம், தாய் ராயம்மா, சகோதரா்கள் குப்புசாமி, பழனிவேல், சகோதரிகள் சரஸ்வதி, விஜயலட்சுமி ஆகியோா் கொலை மிரட்டல் விடுத்தனராம்.

இந்த வழக்கு விசாரணை கடலூா் மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.பாலகிருஷ்ணன் வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா். இதில் ராமதாஸுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.60 ஆயிரம் அபராதமும், இந்திய தண்டனைச் சட்டம் 294(பி) பிரிவின் கீழ் ராமதாஸ் உள்ளிட்ட மேற்கூறிய அவரது குடும்பத்தினா் அனைவருக்கும் தலா ரூ.3 ஆயிரமும், 506(1) பிரிவின்கீழ் தலா ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டாா். இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் அரசு வழக்குரைஞா் க.செல்வப்பிரியா ஆஜரானாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT