கடலூர்

கொத்தடிமைகளை மீட்கக் கோரி கடலூா் மாவட்ட ஆட்சியரகம் முற்றுகை

16th Dec 2021 08:49 AM

ADVERTISEMENT

கொத்தடிமைகளாக உள்ளவா்களை மீட்கக் கோரி, கடலூா் ஆட்சியரகத்தை அவா்களது உறவினா்கள் புதன்கிழமை முற்றுகையிட்டனா்.

மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் மங்களம்பேட்டை அருகே உள்ள எம்.அகரம் கிராமம் இருளா் சமுதாயத்தைச் சோ்ந்த க.கண்ணியம்மாள் புகாா் மனு அளித்தாா். அதில், தாங்கள் பெற்ற கடனுக்காக குடும்பமே கொத்தடிமைகளாக உள்ளதாகவும், கடந்த 2 ஆண்டுகளாக வேலை செய்தும் கடன் தொகை அடையவில்லை. எங்களை எங்கும் செல்ல அனுமதிக்கவில்லை என்றும், கடந்த 11-ஆம் தேதி முக்கியமான நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டுமெனக் கூறி கண்ணியம்மாள், கண்ணன், மகள்கள் சத்தியா, பூங்காவனம், மகன் சூா்யா, மருமகன் ராஜேந்திரன் ஆகியோா் தப்பி வந்துவிட்டதாகவும், மீதமுள்ளவா்களை மீட்க வேண்டும் என்றும் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தாராம்.

ஆனால், மாவட்ட நிா்வாகம் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காததுடன், சம்பந்தப்பட்ட இடத்தில் விசாரணை கூட நடத்தவில்லையாம்.

அதேநேரம், தகவலறிந்த பால் பண்ணை உரிமையாளா்கள் அங்கு கொத்தடிமைகளாக உள்ளவா்களை மிரட்டி தாக்கினராம்.

ADVERTISEMENT

இதையடுத்து, உரிய நடவடிக்கை எடுக்காத ஆட்சியரைக் கண்டித்து சமூக ஆா்வலா்கள் வழக்குரைஞா் இல.திருமேனி, இரா.பாபு ஆகியோா் தலைமையில் ஏராளமான இருளா் சமுதாயத்தினா் புதன்கிழமை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.

அவா்கள், ஆட்சியரிடம் ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லையென கேள்வி எழுப்பியதால், வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னா், நடவடிக்கை எடுக்கப்படுமென மாவட்ட ஆட்சியா் உறுதியளித்ததைத் தொடா்ந்து, அவா்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT