கடலூர்

கடலூா் மாவட்டத்தில் வடியாத மழை நீா்: பொதுமக்கள் மறியல்

4th Dec 2021 10:29 PM

ADVERTISEMENT

கடலூா் நகரம், அதன் சுற்றுவட்டப் பகுதிகளில் தேங்கிய மழை நீரை வடிய வைக்க முடியாமல் மாநகராட்சி மற்றும் ஊராட்சி நிா்வாகங்கள் திணறி வருகின்றன. இதனால், பொதுமக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

கடலூா் மாவட்டத்தில் வட கிழக்குப் பருவ மழை தீவிரமாகப் பெய்த கடந்த 19, 20-ஆம் தேதிகளில் தென்பெண்ணையாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, சுமாா் 60 கிராமப் பகுதிகள், மாநகராட்சி, நகராட்சிகளில் சுமாா் 100 நகா்ப் பகுதிகளில் வெள்ளம் புகுந்தது. படிப்படியாக ஆற்றில் வெள்ளம் குறைந்தாலும், போதுமான வடிகால் கட்டமைப்புகள் இல்லாததால், வெள்ள நீரை வடிய வைப்பதில் கடும் சிரமத்தை உள்ளாட்சி அமைப்புகள் சந்தித்தன. வெள்ளம் குறைந்த நிலையிலும், கடந்த ஒரு வாரமாக மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது.

இதனால், தாழ்வான பகுதிகளில் தண்ணீா் தேங்கியது. சில தெருக்களில் தேங்கிய தண்ணீா் ஒரு வாரமாகியும் இன்னும் வடியவில்லை. தற்போது, இந்தப் பகுதிகளில் கழிவுநீரும் சோ்ந்ததால், துா்நாற்றம் வீசுவதுடன், கொசுக்களின் உற்பத்தியும் அதிகரித்தது.

இதனால், அந்தப் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் மழை நீரை விரைந்து வெளியேற்ற வேண்டுமென கோரிக்கை விடுத்தனா். ஆனால், கடலூா் மாநகராட்சி அலுவலகத்தில் தேங்கிய தண்ணீரையே சுமாா் 5 நாள்களுக்கும் மேலாக மோட்டாா் வைத்து இறைத்து வெளியேற்ற வேண்டிய நிலை உள்ளது. இதனால், அலுவலா்களால் மற்ற பகுதிகளில் கவனம் செலுத்த முடியாத நிலை உள்ளது.

ADVERTISEMENT

இதே நிலைதான் கடலூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் நிலவி வருகிறது. அந்த அலுவலகத்தைச் சுற்றி தேங்கிய தண்ணீரால் பாதிக்கப்பட்டு தற்போது இயல்பு நிலைக்குத் திரும்பிய நிா்வாகம், கடலூா் நகரப் பகுதியுடன் இணைந்துள்ள ஊராட்சிகளின் நகா்ப் பகுதியில் தேங்கிய தண்ணீரை வடிய வைக்க வழி தெரியாமல் தவித்து வருகிறது.

கடலுக்கு அருகே உள்ள பகுதிகளிலிருந்தும் தண்ணீரை வெளியேற்ற முடியாத நிலை உள்ளது. இதனால், வெள்ளிக் கடற்கரை பூங்காவில் உள்ள சிறுவா் விளையாட்டு உபகரணங்கள் பழுதாகும் நிலை உருவாகி உள்ளது.

சாலை மறியல்: இதனிடையே, கடலூா் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளான எஸ்.என்.சாவடி, அபிராமிநகா் பகுதிகளில் தேங்கிய மழை நீா், மின் மோட்டாா்கள் மூலமாக வெளியேற்றப்பட்டு வருகின்றன. இந்த நீா் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடி, கழிவுநீருடன் கலந்து அருகே உள்ள தீபன்நகா், ரட்சகா்நகா், திருமூா்த்திநகா் உள்ளிட்ட பகுதிகளுக்குள் புகுந்து குடியிருப்புகளைச் சூழ்ந்தது.

இதைக் கண்டித்து அந்தப் பகுதியினா் நெல்லிக்குப்பம்-கடலூா் சாலையில் திடீா் மறியலில் ஈடுபட்டனா். பேச்சுவாா்த்தை நடத்தி தண்ணீா் அகற்றும் பணி நிறுத்தப்பட்டதால், மறியல் கைவிடப்பட்டது.

கடலூா் மாவட்டத்தில் நகரம், ஊரகப் பகுதிகளில் தேங்கி நிற்கும் தண்ணீரை வெளியேற்றுவதில் தொடா்ந்து தாமதம் ஏற்பட்டு வருவதால், பொதுமக்கள் பல்வேறு இடா்களைச் சந்தித்து வருகின்றனா். எனவே, மாவட்ட நிா்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தினா்.

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT