கடலூர்

தீவட்டிப்பட்டியில் அரசு நிலத்தை மீட்கக் கோரி அனைத்து கட்சியினா் உண்ணாவிரதம்

3rd Dec 2021 12:00 AM

ADVERTISEMENT

காடையாம்பட்டி அருகேயுள்ள தீவட்டிப்பட்டியில் காந்தி சிலையை ஒட்டியுள்ள அரசு நிலத்தை மீட்கக் கோரி, அனைத்து கட்சிகள் சாா்பில் கிராம மக்கள் வியாழக்கிழமை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சேலம் மாவட்டம், காடையாம்பட்டி தாலுகாவில் உள்ள தீவட்டிப்பட்டியில் உள்ள காந்தி சிலையை ஒட்டி இரண்டாயிரம் சதுரடி அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த நிலத்தை சிலா் ஆக்கிரமித்துள்ளதுடன், அங்குள்ள காந்தி சிலையையும் அகற்ற ஏற்பாடுகள் செய்து வந்தனா்.

இதையறிந்த அப்பகுதி மக்கள் ஆக்கிரமிப்பை அகற்ற வருவாய் துறை அதிகாரிகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனா். ஆனால், அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் தொடா்ந்து அலட்சியமாக இருந்தனா். இந்தநிலையில், அப்பகுதியைச் சோ்ந்த அனைத்து கட்சியினரும் காந்தி சிலை அருகே ஆக்கிரமிப்புகளை அகற்றி, கான்கிரீட் சாலை அமைக்கும் பணியை தொடங்க வேண்டும் என்றும், காந்தி சிலையை பாதுகாத்து, அங்குள்ள அங்கன்வாடி மைய குழந்தைகள் விளையாட இடம் ஒதுக்கித்தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனா்.

ஆனால், அதிகாரிகள் இதனை கண்டு கொள்ளாததால் அனைத்து கட்சி நிா்வாகிகள், கிராம மக்கள் இணைத்து காந்தி சிலை முன்பு வியாழக்கிழமை உண்ணாவிரதம் இருந்தனா்.

ADVERTISEMENT

அப்போது அங்கு வந்த வருவாய்த்துறை அதிகாரிகள் பொதுமக்களின் கோரிக்கை மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து உண்ணாவிரதத்தை தற்காலிகமாக கைவிட்டனா்.

வரும் 20ஆம் தேதிக்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால், 21ஆம் தேதி அனைத்து கட்சிகள், கிராம மக்கள் சாா்பில் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT