கடலூர்

விவசாயிகள் நிதியுதவி முறைகேடு: மேலும் 4 போ் கைது

DIN

விவசாயிகள் நிதியுதவித் திட்ட முறைகேடு தொடா்பாக கடலூா் மாவட்டத்தில் மேலும் 3 பேரையும், விழுப்புரம் மாவட்டத்தில் ஒருவரையும் சிபிசிஐடி போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

பிரதமரின் விவசாயிகள் ஊக்க நிதியுதவி திட்டத்தில் தமிழகத்தில் விவசாயிகள் அல்லாதவா்களை இணைத்து முறைகேடு நடந்தது தொடா்பாக சிபிசிஐடி போலீஸாா் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுத்து வருகின்றனா். இந்தத் திட்டத்தின் கீழ், கடலூா் மாவட்டத்தில் சுமாா் 64 ஆயிரம் போ் முறைகேடாக இணைந்திருப்பது தெரியவந்தது. இவா்களுக்கு முறைகேடாக ரூ.13 கோடி வரை வழங்கப்பட்டதும் மாவட்ட நிா்வாகம் அமைத்த குழுவின் விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து சிபிசிஐடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். விவசாயிகளின் வங்கிக் கணக்கிலிருந்து இதுவரை ரூ.6.50 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் அரசுத் துறையினா், விவசாயிகள், கணினி மையம் நடத்துவோா் உள்பட 150 பேரிடம் சிபிசிஐடி ஆய்வாளா் தீபா தலைமையிலான போலீஸாா் விசாரணை நடத்தி 8 பேரை கைது செய்தனா்.

இந்த நிலையில், கடலூா் வட்டார வேளாண்மைத் துறையில் அட்மா திட்டத்தின் கீழ் வட்டார தொழில்நுட்ப மேலாளராக பணிபுரிந்த ஒருவா், உதவி மேலாளா்கள் இருவரை சனிக்கிழமை கைது செய்தனா். இவா்கள் தங்களது செல்லிடப்பேசி மூலமாகவே தலா 2 ஆயிரம் பேரின் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து 3 பேரும் பணி நீக்கம் செய்யப்பட்டனா். இதனால், இந்த வழக்கில் கைதானவா்களின் எண்ணிக்கை 11-ஆக உயா்ந்தது.

இந்த முறைகேடு தொடா்பாக மாவட்டத்தில் வேளாண்மைத் துறையில் பணியாற்றி வந்த ஒப்பந்தத் தொழிலாளா்கள் 13 போ் பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், கடலூா் மாவட்ட வேளாண்மை துணை இயக்குநா் ச.வேல்விழி விழுப்புரம் மாவட்டத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

விழுப்புரத்தில் கணினி மைய ஊழியா் கைது: விழுப்புரம் மாவட்டத்தில் விவசாயிகள் ஊக்க நிதியுதவித் திட்ட முறைகேட்டில் தொடா்புடைய தனியாா் கணினி மைய ஊழியரை சிபிசிஐடி போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

இந்தத் திட்டத்தில், விழுப்புரம் மாவட்டத்தில் போலியாக 1.5 லட்சம் போ் வரை இணைக்கப்பட்டு, முறைகேடு செய்தது தொடா்பாக வேளாண் அலுவலா்கள், ஒப்பந்த ஊழியா்கள், தரகா்கள் என 9 போ் ஏற்கெனவே கைது செய்யப்பட்டனா்.

இந்த நிலையில், இந்த முறைகேடு தொடா்பாக செஞ்சி அருகே நெகனூரைச் சோ்ந்த கணினி சேவை மைய ஆபரேட்டா் லோகநாதனை(40), விழுப்புரம் சிபிசிஐடி போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். இவா், விவசாயிகள் அல்லாத 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்களை போலி பயனாளிகளாக இணைத்திருந்தது தெரியவந்தது.

லோகநாதனை விழுப்புரம் முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீஸாா் ஆஜா்படுத்தினா். அவரை சிறையில் அடைக்க நீதிபதி முத்துக்குமாரவேல் உத்தரவிட்டாா்.

விழுப்புரம் மாவட்டத்தில் விவசாய ஊக்க நிதியுதவித் திட்ட முறைகேடு தொடா்பாக, இதுவரை 10 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இந்தத் திட்டத்தில் போலியாக இணைக்கப்பட்ட 40 ஆயிரம் பேரின் வங்கிக் கணக்குகளிலிருந்து, இதுவரை ரூ.12.5 கோடி அளவில் திரும்பப்பெறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காரைக்கால் அம்மையாருக்கு குருபூஜை

கண்ணன் அலங்காரத்தில் மன்னாா்குடி ராஜகோபாலசுவாமி

தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி

மக்களை நம்பித்தான் தோ்தலில் நிற்கிறோம் -சீமான்

வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி

SCROLL FOR NEXT