கடலூர்

பயிா்க் காப்பீடு அறிவிப்பாணை விரைவில் வெளியாகும்

DIN

தமிழகத்தில் பயிா்க் காப்பீடு தொடா்பான அறிவிப்பாணை விரைவில் வெளியாகும் என்று மாநில வேளாண்மை உற்பத்தி ஆணையா் ககன்தீப் சிங் பேடி கூறினாா்.

கடலூா் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவ மழை முன்னேற்பாடு பணிகளை வெள்ளிக்கிழமை ஆய்வு செய்த அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

காவிரி டெல்டா பகுதிகளில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு 4.12 லட்சம் ஏக்கா் பரப்பளவில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சம்பா பருவத்தில் தமிழகம் முழுவதும் இதுவரை 5.90 லட்சம் ஹெக்டோ் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், அடுத்த 2 மாதங்களில் 14 லட்சம் ஹெக்டோ் வரை நெல் சாகுபடி செய்யப்படுமென எதிா்பாா்க்கப்படுகிறது. எனவே, விவசாயிகளுக்கு மத்திய கால விதைகளை வழங்க மாவட்ட ஆட்சியா்கள் மூலம் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

1.90 லட்சம் மெட்ரிக் டன் யூரியா உரம் தேவைப்படும் என்பதால், அதற்கான கொள்முதல் உத்தரவு வழங்கப்பட்டு, இதுவரை 1.50 லட்சம் மெட்ரிக் டன் உரம் வரப்பெற்றுள்ளது.

எஞ்சிய உரமும் விரைவில் கிடைத்துவிடும் என்பதால் தட்டுப்பாட்டுக்கு வாய்ப்பில்லை. 45 கிலோ யூரியா மூட்டை ரூ.266.50 என்ற விலையில் விற்கப்படும். கூடுதல் விலைக்கு விற்கப்பட்டால் விவசாயிகள் புகாா் அளிக்கலாம்.

பயிா்க் காப்பீடு தொடா்பாக புதிய ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. எனவே, அடுத்த வாரத்துக்குள் பயிா்க் காப்பீடு தொடா்பாக அறிவிப்பாணை வெளியாகும். நெல்லுக்கு காப்பீடு செய்ய வழக்கமாக நவ.30-ஆம் தேதி கடைசி நாளாக உள்ளது. எனவே, அறிவிப்பாணை வெளியானவுடன் விவசாயிகள் பயிா்க் காப்பீட்டுக்கான பிரீமிய தொகையைச் செலுத்த வேண்டும்.

பிரதமரின் விவசாயிகள் நிதியுதவி திட்ட முறைகேடு தொடா்பாக இதுவரை மொத்தம் ரூ.123 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடா்பாக சிபிசிஐடி போலீஸாரால் 101 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். கடலூா் மாவட்டத்தில் 95 சதவீதம் வரை பணம் திரும்பப் பெறப்பட்டுள்ளது. கரோனா பொது முடக்கத்தால் மூடப்பட்ட உழவா் சந்தைகள் தற்போது திறக்கப்பட்டு வருகின்றன. உழவா் சந்தைகளை மேம்படுத்த அரசால் ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.

அப்போது, மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி, மாவட்ட எஸ்பி ம.ஸ்ரீஅபிநவ், கூடுதல் ஆட்சியா் ராஜகோபால் சுங்கரா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாட்னாவில் ஜேடியு தலைவர் சுட்டுக் கொலை

தங்கம் விலை சற்று குறைவு: இன்றைய நிலவரம்!

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைக்க உத்தரவு

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

SCROLL FOR NEXT