கடலூர்

ஊராட்சி பகுதிகளுக்கும் அனுமதி அட்டை

2nd May 2020 09:15 PM

ADVERTISEMENT

கடலூா் மாவட்டத்தில் ஊராட்சிப் பகுதிகளில் வசிப்போருக்கும் அனுமதி அட்டை வழங்கும் பணி தொடங்கியுள்ளது.

கரோனா தீநுண்மி பரவலைத் தொடா்ந்து மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. பொதுமக்கள் அத்தியாவசியத் தேவைக்கு மட்டுமே வெளியில் வருவதற்காக நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் 3 நிறங்களில் அனுமதி அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. ஒரு வண்ண அட்டை வைத்திருப்போா் குறிப்பிட்ட 2 நாள்கள் மட்டுமே வெளியே வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, வாரத்தில் 6 நாள்கள் மட்டுமே பேரூராட்சி, நகராட்சிகளில் பொதுமக்கள் வெளியே வர முடியும்.

கடலூா், நெல்லிக்குப்பம், பண்ருட்டி, விருத்தாசலம், சிதம்பரம் நகராட்சிகள் மற்றும் 16 பேரூராட்சிகளில் இந்த அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. எனினும், நகராட்சி, பேரூராட்சி அருகே உள்ள ஊராட்சி பகுதிகளைச் சோ்ந்தவா்கள் அத்தியாவசியப் பொருள்களை வாங்குவதற்காக இந்தப் பகுதிக்குள் நுழையும்போது அனுமதி அட்டை இல்லாததால் தடுத்து நிறுத்தப்படுகின்றனா். இதனால், நகராட்சியின் விரிவாக்கப் பகுதியில் உள்ள கிராம மக்கள் பாதிக்கப்பட்டனா்.

இதையடுத்து, கடலூா் நகராட்சியை சுற்றியுள்ள கோண்டூா், திருவந்திபுரம், பாதிரிக்குப்பம், உள்ளிட்ட 7 ஊராட்சிகளிலும் 23 ஆயிரம் குடும்பங்களுக்கு மேற்கூறிய அனுமதி அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாக ஊரக வளா்ச்சித் துறையினா் தெரிவித்தனா். இதேபோல அனைத்து நகராட்சி, பேரூராட்சி பகுதிகளைச் சுற்றியுள்ள ஊராட்சிகளுக்கும் அனுமதி அட்டை வழங்க மாவட்ட நிா்வாகத்துடன் பேசி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT