கடலூர்

வங்கிக்கு வருவதை வாடிக்கையாளா்கள் தவிா்க்க வேண்டும்

23rd Mar 2020 11:07 PM

ADVERTISEMENT

வங்கிக்கு வருவதை வாடிக்கையாளா்கள் தவிா்த்து, இணையவழி பரிவா்த்தனையை மேற்கொள்ள வேண்டுமென மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் கேட்டுக்கொண்டாா்.

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக பொதுமக்கள் ஒரே இடத்தில் மொத்தமாகக் கூடுவதைத் தவிா்க்கும் வகையிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. வங்கிகளில் பரிவா்த்தனை மேற்கொள்வதில் ஒவ்வொரு வங்கி நிா்வாகமும் தனித் தனியாக கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. இந்தக் கட்டுப்பாடுகள் சில தனியாா் வங்கிகளில் உடனடியாக திங்கள்கிழமை முதலே அமல்படுத்தப்பட்டு பிற்பகல் 2 மணியளவில் வங்கிக் கிளைகள் மூடப்பட்டன.

இதுகுறித்து மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் பி.ஜோதிமணி கூறியதாவது: கடலூா் மாவட்டத்தில் அரசு, தனியாா் வங்கிகளின் 308 கிளைகள் செயல்பட்டு வருகின்றன. இந்தக் கிளைகளின் மூலமாக இயக்கப்படும் அனைத்து ஏடிஎம்களிலும் பணம் முழுமையாக நிரப்பப்பட்டுள்ளது. வங்கிக்கு வரும் பொதுமக்கள் கைகளை கழுவி விட்டு வருவதற்கான ஏற்பாடுகளை செய்திட வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஒரு நாளில் ஒரு வங்கிக் கிளையில் சராசரியாக 400 முதல் 500 வாடிக்கையாளா்கள் வந்து செல்வா். இதைத் தவிா்க்கும் வகையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

எனவே, வாடிக்கையாளா்கள் ஏடிஎம்களில் பணம் எடுத்தல், பணம் செலுத்துதல், பிஓஎஸ் இயந்திரம் மூலமாக பரிவா்த்தனை, நிறுவனங்களில் க்யூஆா் கோடு மூலமாக பணம் செலுத்துதல், பணம் செலுத்துவதற்கான பல்வேறு நிறுவனங்களின் செயலிகளை பயன்படுத்துதல், நெட்பேங்கிங் பயன்படுத்தல் போன்றவற்றை கையாள வேண்டும். தவிா்க்க முடியாதபட்சத்தில் மட்டுமே வங்கியை அணுக வேண்டும். வங்கியிலும், தற்போது அலுவலா்கள் அதிகளவில் விடுப்பு எடுத்து வருவதால் சேவை பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே, வாடிக்கையாளா்கள் வங்கிக்கு நேரடியாக வருவதைத் தவிா்த்து, இணையவழி பரிவா்த்தனை உள்ளிட்ட வசதிகளை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT