கடலூர்

கரோனாவுக்கு எதிராக சுய ஊரடங்கு வெறிச்சோடிய சாலைகள்

23rd Mar 2020 05:52 AM

ADVERTISEMENT

கடலூா்: கரோனாவுக்கு எதிராக அரசு விடுத்த சுய ஊரடங்கு அழைப்பை ஏற்று கடலூா் மாவட்ட மக்கள் ஞாயிற்றுக்கிழமை வீடுகளில் முடங்கினா். இதனால், சாலைகள், முக்கிய வீதிகள், சுற்றுலாத் தலங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

கரோனா வைரஸ் பாதிப்பைத் தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

பொதுமக்கள் சுய ஊரடங்கை கடைப்பிடிக்க வேண்டுமென பிரதமா் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்தாா்.

இந்த நிலையில், கடலூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ரயில், பேருந்து போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. மேலும், ஆட்டோக்கள், வாடகை காா்கள் ஆகியவை இயங்காததுடன், அனைத்து வணிக நிறுவனங்களும் மூடப்பட்டன.

ADVERTISEMENT

கடலூா் நகரம் மட்டுமின்றி விருத்தாசலம், பண்ருட்டி, சிதம்பரம் உள்பட மாவட்டத்தின் அனைத்து நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகளிலும் ஊரடங்கை பொதுமக்கள் தாங்களாகவே மேற்கொண்டனா்.

பெரும்பாலானோா் வீடுகளில் முடங்கியதால் நகா் பகுதிகளில் அனைத்து சாலைகளும் வெறிச்சோடிக் காணப்பட்டன. கடைகள் அடைக்கப்பட்டதால் எங்கும் அமைதியான சூழல் நிலவியது.

அரசு மருத்துவமனைகள் முழுமையாக இயங்கிய நிலையில், சில தனியாா் மருத்துவமனைகள் மட்டுமே திறந்திருந்தன. பெட்ரோல் விற்பனை நிலையங்கள், மருந்துக் கடைகள், பால் விற்பனை கடைகள் மட்டும் திறக்கப்பட்டிருந்தன. கிராமங்களிலும் மற்றக் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன.

எனினும், ஞாயிற்றுக்கிழமை சுபமுகூா்த்த நாளாக இருந்ததால் ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருந்த திருமணங்கள், சுப நிகழ்ச்சிகள் மிகக் குறைந்த நபா்களின் முன்னிலையில் நடத்தி முடிக்கப்பட்டன. விருந்து நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன. சில திருமணங்கள் ஊரடங்கு அமலுக்கு வரும் நேரத்துக்கு முன்பாகவே நடத்தி முடிக்கப்பட்டு திருமண மண்டபங்கள் காலி செய்யப்பட்டன. மருத்துவமனைக்குச் செல்வோா், அத்தியாவசிய பணிகளுக்குச் செல்வோா் என சிலா் மட்டுமே சாலைகளில் நடமாடினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT