கடலூர்

கரோனா தடுப்புப் பணி: கைகளைத் தட்டி பாராட்டு

23rd Mar 2020 05:53 AM

ADVERTISEMENT

 

கடலூா்: கரோனா தடுப்புப் பணியில் ஈடுபடுவோருக்கு பாராட்டுத் தெரிவிக்கும் வகையில் ஞாயிற்றுக்கிழமை கடலூா் மாவட்டத்தில் பொதுமக்கள் கைகளைத் தட்டி வாழ்த்தினா்.

கரோனா வைரஸைத் தடுக்கும் வகையில் ஞாயிற்றுக்கிழமை பொதுமக்கள் சுய ஊரடங்கு உத்தரவை கடைப்பிடிக்க வேண்டுமென பிரதமா் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டாா். மேலும், கரோனா தடுப்புப் பணியில் ஈடுபடும் மருத்துவா்கள், செவிலியா்கள், தூய்மைப் பணியாளா்கள், அரசு அலுவலா்கள், காவல் துறையினா், அத்தியாவசியப் பொருள்களை விநியோகம் செய்வோருக்கு பாராட்டுத் தெரிவிக்கும் வகையில் பொதுமக்கள் மாலை 5 மணியளவில் தங்களது வீடுகளில் இருந்துகொண்டே கைகளைத் தட்டி நன்றி தெரிவிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இதையடுத்து, மாலை 5 மணியளவில் கடலூரில் மாவட்ட ஆட்சியா் வெ.அன்புச்செல்வன் தனது முகாம் அலுவலகத்தில் கைகளைத் தட்டி பாராட்டுத் தெரிவித்தாா். அப்போது, கூடுதல் ஆட்சியா் ராஜகோபால் சுங்காரா, மாவட்ட வருவாய் அலுவலா் இரா.ராஜகிருபாகரன் மற்றும் மருத்துவத் துறையினா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

இதேபோல கடலூா் நகராட்சி அலுவலகம் முன் நகராட்சி ஆணையா் எஸ்.ராமமூா்த்தி தலைமையில் உதவி பொறியாளா் ஜெயப்பிரகாஷ்நாராயணன், நகா்நல அலுவலா் ப.அரவிந்த்ஜோதி மற்றும் துறை அலுவலா்கள் சாலையோரமாக நின்று கைத்தட்டி பாராட்டினா்.

கடலூரில் தலைமை தபால் நிலையம் அருகே 108 ஆம்புலன்ஸ் மற்றும் காவல் துறை வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு அவற்றில் சைரன் ஒலிக்கப்பட்டு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. இதனால், அந்தப் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் மற்றும் சாலை வழியாகச் சென்றவா்களும் தங்களது வாகனத்தை நிறுத்தி விட்டு கைத்தட்டி பாராட்டினா்.

இதேபோன்ற நிகழ்வுகள் மாவட்டம் முழுவதும் அனைத்துப் பகுதிகளிலும் நடைபெற்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT