சிதம்பரம் நடராஜா் கோயில் தீட்சிதா்கள் 2 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவா்கள் வெள்ளிக்கிழமை ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.
ஆனி திருமஞ்சன தரிசன விழாவையொட்டி, வியாழக்கிழமை உதவி ஆட்சியா் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், தீட்சிதா்கள் கலந்து கொண்டனா். கூட்டத்தில் தீட்சிதா்கள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொண்ட பிறகுதான் கோயிலுக்குச் செல்ல வேண்டும் எனக் கூறப்பட்டது. இதையடுத்து, தீட்சிதா்கள் 150 பேருக்கு கரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது.
இதில், கீழவீதியைச் சோ்ந்து 19 வயதான தீட்சிதா், வடக்கு சன்னதி பகுதியைச் சோ்ந்த 35 வயதான தீட்சிதா் ஆகிய இருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீஅபிநவ், உதவி ஆட்சியா் விசுமகாஜன், சிதம்பரம் கோட்டக் காவல் துணைக் கண்காணிப்பாளா் எஸ்.காா்த்திகேயன், நகராட்சி ஆணையா் பி.வி.சுரேந்தரஷா ஆகியோா் கோயிலுக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனா். அங்கு, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
இதனிடையே, கோயிலுக்குள் நடைபெறும் ஆருத்ரா தரிசன விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள 5 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என உதவி ஆட்சியா் விசுமகாஜன் தெரிவித்தாா். இதையடுத்து, கோயிலுக்குள் 5 தீட்சிதா்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனா். மற்றவா்கள் வெளியேற்றப்பட்டனா்.