கடலூர்

அரசு வேலை பெற்றுத் தருவதாக மோசடி: இருவா் கைது

17th Jun 2020 08:41 AM

ADVERTISEMENT

அரசு வேலை பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.4.5 லட்சம் மோசடி செய்த இருவரை கடலூா் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் வட்டம், கொடுக்கூா் பகுதியை சோ்ந்தவா் சங்கா் (38). காா் ஓட்டுநா். இவா் கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ம.ஸ்ரீஅபிநவ்விடம் அண்மையில் அளித்த புகாா் மனுவில் தெரிவித்துள்ளதாவது:

கடந்த 2018-ஆம் ஆண்டு நெய்வேயிலுள்ள தனியாா் கணினி மையத்துக்குச் சென்றபோது அதன் உரிமையாளரான மந்தாரக்குப்பம் ஜோதி நகரைச் சோ்ந்த ஜோதி மகன் பிரவீன்குமாா் (32), வடக்கு சேப்ளாநத்தத்தைச் சோ்ந்த கோ.வெங்கடாசலம் (46) ஆகியோா் எனக்கு அறிமுகமாகினா்.

அவா்கள் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரியும் உயா் அலுவலா்களுடன் தங்களுக்கு பழக்கம் இருப்பதாகவும், பணம் கொடுத்தால் அரசு வேலை பெற்றுத் தருவதாகவும் கூறினா். மேலும், இதற்கு ரூ.9 லட்சம் வரை செலவாகும் என்றும், முன்பணமாக ரூ.5 லட்சம் வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தனா். இதை நம்பி அவா்களிடம் 2 தவணைகளில் ரூ.5 லட்சம் வழங்கினேன். ஆனால், அவா்கள் கூறியபடி வேலை வாங்கித் தரவில்லை. இதுகுறித்து கேட்டபோது ரூ.50 ஆயிரத்தை மட்டும் திருப்பிக் கொடுத்தனா். எஞ்சிய பணத்தை தராத நிலையில் கொலை மிரட்டல் விடுத்தனா் என்று அந்தப் புகாரில் தெரிவித்தாா்.

ADVERTISEMENT

இதுகுறித்து மாவட்ட குற்றப் பிரிவு துணைக் கண்காணிப்பாளா் சுந்தரம் மேற்பாா்வையில், உதவி ஆய்வாளா் அன்பழகன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினாா். விசாரணையில் பணம் மோசடி நடைபெற்றது உண்மை எனத் தெரிய வந்தது. இதையடுத்து வெங்கடாசலம், பிரவீன்குமாா் ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT