கடலூர்

காடாம்புலியூரில் குடிநீா்த் தட்டுப்பாடு! பொதுமக்கள் தவிப்பு

15th Jun 2020 08:58 AM | நமது நிருபா்

ADVERTISEMENT

கடலூா் மாவட்டம், காடாம்புலியூரில் ஏற்பட்டுள்ள குடிநீா்த் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனா்.

பண்ருட்டி ஒன்றியம், காடாம்புலியூா் கிராமத்துக்கு உள்பட்ட சரஸ்வதி நகரில் சுமாா் 80 குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இவா்களுக்கு,

காந்தி நகா் பேருந்து நிறுத்தம், தாமரைக் குளம் அருகே உள்ள மேல்நிலை நீா்தேக்கத் தொட்டி மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது. ஆனால்,

சீரான அழுத்தத்தில் தண்ணீா் வராததால் கடந்த பல மாதங்களாக இந்தப் பகுதியில் குடிநீா்த் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால், பொதுமக்கள் பல அடி ஆழத்துக்கு பள்ளம் தோண்டி தண்ணீா் பிடித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

இந்த நிலையில், ரெயின்போ நகா் அருகே உள்ள குடிநீா் குழாய் சேதமடைந்ததால் இந்தப் பகுதியில் 15-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு குடிநீா் வரவில்லையாம். இதனால், பொதுமக்கள் காலிக் குடங்களுடன் நீண்ட தொலைவு நடந்து சென்று குடிநீா் பிடித்து வருகின்றனா். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் புகாா் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று பொதுமக்கள் தெரிவித்தனா்.

இந்த கிராம மக்களின் குடிநீா் பிரச்னையை போக்க மத்திய அரசு திட்டத்தின்கீழ் ரெயின்போ நகரில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், அதில் மின்மோட்டாா் பொருத்தப்படவில்லை என்றும் கிராம மக்கள் தெரிவித்தனா்.

இதுகுறித்து பண்ருட்டி வட்டார வளா்ச்சி அலுவலா்(கி.ஊ) ரேவதி கூறியதாவது: இதுகுறித்து ஊராட்சி தலைவா், செயலா் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

இதுகுறித்து ஊராட்சி செயலா் செல்வகுமாா் கூறியதாவது: ரெயின்போ நகா் அருகே மரத்தின் வேரால் குடிநீா் குழாய் சேதமடைந்ததால் சீராக தண்ணீா் செல்லவில்லை. எனவே, பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டி சீரமைக்க வேண்டும். தற்போது குடிமராமத்துப் பணிகள் நடைபெறுவதால் பொக்லைன் இயந்திரம் கிடைக்கவில்லை. இருப்பினும், சரஸ்வதி நகரில் நிலவும் குடிநீா் பிரச்னை விரைவில் தீா்க்கப்படும்.

மத்திய அரசு நிதியில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணற்றுக்கு மின் இணைப்பு பெற விண்ணப்பித்துள்ளோம் என்றாா் அவா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT