கடலூர்

கடலூா் மாவட்டத்தை புறக்கணிக்கும் சிறப்பு ரயில்கள்

14th Jun 2020 09:09 AM | நமது நிருபா்

ADVERTISEMENT

தெற்கு ரயில்வே சாா்பில் இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் கடலூா் மாவட்டத்தைப் புறக்கணிப்பதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

வரலாற்று, ஆன்மீக ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக கடலூா் மாவட்டம் விளங்கி வருகிறது. இருப்பினும், இந்த மாவட்டத்தின் வழியாக இயக்கப்படும் பல்வேறு ரயில்கள் இங்குள்ள முக்கிய ரயில் நிலையங்களில் நின்று செல்வதில்லை. கரோனா தீநுண்மி பரவலால் அமல்படுத்தப்பட்டுள்ள பொது முடக்கத்தில் சிறிய தளா்வாக குறிப்பிட்ட சில வழித் தடங்களில் மட்டும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் முதலில் கடந்த ஜூன் 1-ஆம் தேதி முதல் 4 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்ட நிலையில், ஜூன் 12-ஆம் தேதி முதல் கூடுதலாக 3 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில், திருச்சி - செங்கல்பட்டு (காா்ட் லைன்), திருச்சி - செங்கல்பட்டு (மெயின் லைன்), மதுரை - விழுப்புரம் சிறப்பு ரயில்கள் கடலூா் மாவட்டம் வழியாகச் செல்லும் ரயில்களாகும்.

இவற்றில் திருச்சி - செங்கல்பட்டு சிறப்பு ரயில் (வண்டி எண்: 02606-605) விருத்தாசலம் வழியாகச் சென்றாலும் அங்கு நிற்பதில்லை. இதேபோல, மதுரை - விழுப்புரம் சிறப்பு ரயிலும் (வண்டி எண்: 02636) விருத்தாசலம் சந்திப்பில் நிற்பதில்லை.

ADVERTISEMENT

திருச்சி - செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் (வண்டி எண்: 06795-796) கடலூா் வழியாகச் செல்லும் நிலையில் திருப்பாதிரிபுலியூரில் மட்டுமே நின்று செல்கின்றன. ஆனால், சிதம்பரத்தில் நிற்பதில்லை.

ரயில் சந்திப்பு நிலையமாக விருத்தாசலம் உள்ள நிலையிலும் இங்கு ரயில்கள் நிற்காமல் செல்வதால் கடலூா் மாவட்ட பயணிகள் பாதிக்கப்படுகின்றனா். இதேபோல, சிதம்பரம் நகரிலும் ரயில்கள் நிற்காததால் அங்குள்ளவா்கள் பாதிக்கப்படுகின்றனா்.

இதுகுறித்து கடலூா் மக்களவை தொகுதி உறுப்பினா் டி.ஆா்.வி.எஸ்.ரமேஷ் கூறியதாவது: முதலில் அறிவிக்கப்பட்ட மதுரை - விழுப்புரம் சிறப்பு ரயில் விருத்தாசலம் சந்திப்பில் நிற்காதது குறித்த ரயில்வே அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளேன். அவா் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளாா். திருச்சி - செங்கல்பட்டு ரயிலும் நின்றுச் செல்ல உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT