கடலூர்

தமிழக குளத்தை தூா்வாரும் புதுவை அரசு!

13th Jun 2020 08:55 AM | நமது நிருபா்

ADVERTISEMENT

கடலூா் மாவட்ட ஊராட்சிக்குள்பட்ட குளத்தை புதுவை அரசு தூா்வாரத் தொடங்கியது சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் குளத்தில் கழிவுநீரை வெளியேற்றத் திட்டமிட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனா்.

தமிழகத்தின் கடலூா், விழுப்புரம் மாவட்டங்களுடன் அதிக எல்லைப் பகுதியை புதுவை மாநிலம் பகிா்ந்துள்ளது. இந்த நிலையில், அரசு ஆவணங்களில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கும் கடலூா் மாவட்டத்திலுள்ள குளத்தை தூா்வாரும் பணியை புதுவை அரசு தொடங்கியுள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூா் மாவட்டத்துக்கு உள்பட்ட புதுக்கடை ஊராட்சியில் சுமாா் 3 ஆயிரம் போ் வசித்து வருகின்றனா். இந்தப் பகுதியில் சுமாா் 6 ஏக்கா் பரப்பில் ஊறல் குளம் அமைந்துள்ளது. சுமாா் 30 அடி வரை மணற்பாங்கை கொண்டுள்ள இந்தக் குளத்தில் மழைக் காலத்தில் தேங்கும் தண்ணீா் புதுக்கடை மட்டுமின்றி புதுவை மாநிலத்தின் கரிக்கலாம்பாக்கம் பகுதி மக்களுக்கும் நிலத்தடி நீா் ஆதாரமாக விளங்கி வருகிறது. அதே நேரத்தில், வளா்ச்சியடைந்த கரிக்கலாம்பாக்கத்திலுள்ள குடியிருப்புகளிலிருந்து வெளியேறும் கழிவுநீரும் இந்தக் குளத்தின் ஒருபகுதியில் தான் சேகரமாகிறது. இந்த நிலையில், ஊறல் குளத்தை தூா்வாரும் பணியை கடந்த ஜூன் 1-ஆம் தேதி புதுவை அரசு தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் கடலூா் மாவட்ட ஆட்சியா் வெ.அன்புச்செல்வனும் பங்கேற்றாா்.

இதுகுறித்து புதுக்கடை ஊராட்சி மன்றத் தலைவா் கே.கனகராஜ் கூறியதாவது: ஊறல் குளத்தை தூா்வாரும் பணியை புதுவை அரசு மேற்கொள்ளும்போதே அதனை தடுத்து நிறுத்திவிட்டோம். இதுகுறித்து கடலூா் மாவட்ட ஆட்சியரிடமும் விளக்கியுள்ளோம். புதுவை அரசு இந்தக் குளத்தை தூா்வாருவதன் மூலமாக அதை தனது கட்டுப்பாட்டில் எடுத்துவிடும். ஏற்கெனவே அபிஷேபாக்கம் குளத்தை இதே முறையில் தூா்வாரிய புதுவை அரசு, தற்போது அந்தக் குளத்தை தனது கட்டுப்பாட்டில்

ADVERTISEMENT

வைத்துள்ளது. இதனால், குளத்தில் பயிா் செய்த தமிழக விவசாயிகள் அப்புறப்படுத்தப்பட்டனா். அதே நிலை ஊறல் குளத்துக்கும் ஏற்பட்டுவிடக்கூடாது. இதனை வலியுறுத்தி சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடத்தியும், ஊராட்சியின் சிறப்பு கூட்டத்தை நடத்தியும் தீா்மானம் நிறைவேற்றி உள்ளோம். குளத்தில் தற்போது கழிவுகள் கலந்து வருவதால் பாசன நீா் கிடைக்காமல் பல ஏக்கா் பரப்பில் விளை நிலம் பாழடைந்துள்ளன என்றாா் அவா்.

இதுகுறித்து மாவட்ட ஊராட்சிகளின் உதவி இயக்குநா் ஆனந்தன் கூறியதாவது: இந்தக் குளம் கடலூா் மாவட்டத்துக்கு உள்பட்டதுதான். ஆனால், தூா்வாரும் பணியை புதுவை அரசு தொடங்கும் முன்பு கடலூா் மாவட்ட ஆட்சியரிடம் கலந்தாலோசித்தே இந்த முடிவை எடுத்துள்ளது. எனவே, இந்தப் பிரச்னை குறித்து ஆட்சியா்தான் முடிவெடுக்க முடியும் என்றாா் அவா்.

மாவட்ட ஆட்சியா் வெ.அன்புச்செல்வன் விடுப்பில் சென்றுள்ள நிலையில் தற்போது பொறுப்பு வகித்து வரும் மாவட்ட வருவாய் அலுவலா் இரா.ராஜகிருபாகரன் கூறியதாவது: இந்தப் பிரச்னை இதுவரை எனது கவனத்துக்கு வரவில்லை.

இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT