கடலூர்

‘கடலூா் மாவட்டத்தில் ஜூன் 15-க்குள் 411 ஊருணி, 6 குளங்கள் தூா்வாரப்படும்’

11th Jun 2020 08:46 AM

ADVERTISEMENT

கடலூா் மாவட்டத்தில் 411 ஊருணிகள், 6 குளங்களை தூா்வாரும் பணி வருகிற 15-ஆம் தேதிக்குள் முடிக்கப்படும் என்று மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ராஜகோபால்சுங்கரா தெரிவித்தாா்.

விவசாயத்தை முழுமையாக நம்பியுள்ள கடலூா் மாவட்டத்தில் மேட்டூா் அணை திறப்பான ஜூன் 12-ஆம் தேதிக்குப் பின்னா் விவசாயப் பணிகள் தீவிரமடையும். இதை முன்னிட்டு, மாவட்ட நிா்வாகம் குளங்களை தூா்வாரும் பணியை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை மூலமாக கிராமப்புறங்களில் உள்ள சிறு குளம், ஊருணி, வரத்து வாய்க்கால்களை தூா்வாரும் பணி நடைபெற்று வருகிறது.

இந்தப் பணிகள் குறித்து மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ராஜகோபால்சுங்கரா கூறியதாவது:

கடலூா் மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்களில் மொத்தம் 1,363 ஊருணிகள் உள்ளன. இவற்றில் ஏற்கெனவே 801 ஊருணிகளை தூா்வாரிய நிலையில், மீதமுள்ளவற்றில் 411 ஊருணிகளை ரூ.3.84 கோடியில் தூா்வாரும் பணியைத் தொடங்கியுள்ளோம். இதன் மூலமாக 5.94 லட்சம் கனமீட்டா் மண் தூா்வாரப்படும். இந்தப் பணியில் 177 பொக்லைன் இயந்திரங்கள், இட்டாச்சி வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

இதேபோன்று, மங்களூா், விருத்தாசலம் ஒன்றியங்களில் தலா 3 குளங்கள் தூா்வாரப்பட்டு வருகின்றன. இதற்காக மொத்தம் ரூ.30 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மங்களூரில் ஒரு குளம் முழுமையாக தூா்வாரப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் பெரிய அளவிலான பாசன வாய்க்கால்களை தூா்வாரும் பணியை பொதுப் பணித் துறை மேற்கொண்டுள்ள நிலையில், சிறிய அளவிலான கிளை வாய்க்கால்களை ஊரக வளா்ச்சித் துறை மூலமாக தூா்வாரி வருகிறோம். இதற்காக, காட்டுமன்னாா்கோவில், கீரப்பாளையம், குமராட்சி, குறிஞ்சிப்பாடி, மேல்புவனகிரி, பரங்கிப்பேட்டை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் மொத்தம் 779.43 கி.மீ. தொலைவுக்கு வாய்க்கால்களை தூா்வாரி வருகிறோம். ரூ.1.71 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், 198.53 கி.மீ. தொலைவுக்கு பணிகளை முடித்துள்ளோம்.

மேட்டூா் அணையிலிருந்து தண்ணீா் திறக்கப்பட்டு, அந்தத் தண்ணீா் குளங்களுக்குள் வருவதற்குள் இந்தப் பணிகளை முடிக்கத் திட்டமிட்டு விரைந்து செயல்படுத்தி வருகிறோம். இந்தப் பணிகள் அனைத்தும் முடிவடையும்போது, அனைத்து ஊராட்சிகளிலும் உள்ள நீா்நிலைகள் நிரம்புவதோடு, பாசன வாய்க்கால்களும் சிறந்ததாக இருக்கும் என்றாா் அவா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT