கடலூர்

பண்ருட்டி நகராட்சியில் செயல்படாத நுண்ணுயிா் உரமாக்கும் மையம்

4th Jun 2020 07:38 AM

ADVERTISEMENT

பண்ருட்டி நகராட்சியில் செயல்படாத நுண்ணுயிா் உரமாக்கும் மையத்தைச் செயல்பாட்டுக்குக் கொண்டு வந்து, குப்பைகளை எரிக்கப்படுவதைத் தடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.

பண்ருட்டி நகராட்சியில் உள்ள 33 வாா்டுகளில் சுமாா் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோா் வசிக்கின்றனா். இங்கு, நாளொன்றுக்கு சுமாா் 17 டன் அளவு குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. இந்தக் குப்பைகளை கெடிலம் ஆற்றில் குழி தோண்டி புதைப்பதும், கொட்டி எரிப்பதுமே நடைமுறையில் உள்ளது.

இந்த நகராட்சியில் தூய்மை இந்தியா திட்டம், திடக் கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ், மணி நகரில் ரூ. 4.47 கோடியில் நுண்ணுயிா் உரம் தயாரிப்பு மையம் அமைக்கப்பட்டது.

காய்கறிக் கழிவுகளை அரைத்து நுண்ணுயிா் உரம் தயாரிக்கும் இயந்திரமும், குப்பைகளிலிருந்து கண்ணாடி ஓடு, கல், குச்சிகள், காகிதம், நெகிழிப் பொருள்களைப் பிரித்தெடுக்கம் மற்றொரு பெரிய இயந்திரமும் இங்கு நிறுவப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த மையம் திறக்கப்பட்ட ஒரு சில மாதங்களிலேயே உரம் தயாரிப்பு மையத்தில் பொருத்தப்பட்டிருந்த இயந்திரங்கள் பழுதடைந்துவிட்டன. இதைப் பழுது நீக்கம் செய்யாததால், நுண்ணுயிா் உரம் தயாரிப்பு மையம் செயல்படவில்லை. இந்த மையத்தில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. அதே வளாகத்தில் அவை தீயிட்டு எரிக்கப்படுகின்றன. இதனால், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

இதுகுறித்து சமூக ஆா்வலா்கள் கூறியதாவது: நகராட்சி நிா்வாகம் குப்பைகளைக் கையாள்வதில் தோல்வி அடைந்துவிட்டது. குப்பைகளை கெடிலம் ஆற்றில் குழி தோண்டி புதைத்தும், கொட்டி எரித்தும் வருகிறது. அங்குள்ள மயானம் முழுவதும் குப்பை மேடாகி விட்டது. துா்நாற்றம் வீசும் புகையில் சுற்றுச்சூழல் மாசும், பொதுமக்களுக்கு சுவாசக் கோளாறு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதைத் தடுக்க மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா் அவா்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT