கடலூர்

நேதாஜி பிறந்தநாள்: பல்வேறு அமைப்பினா் மரியாதை

23rd Jan 2020 11:58 PM

ADVERTISEMENT

நேதாஜி பிறந்தநாள் விழாவையொட்டி பல்வேறு அமைப்பினரும் அவரது உருவச் சிலை, படத்துக்கு மாலை அணிவித்து வியாழக்கிழமை மரியாதை செலுத்தினா்.

இந்திய சுதந்திரப் போராட்டத்தின்போது ஆங்கிலேயா் ஆட்சிக்கு எதிராக ராணுவம் அமைத்து போராடியவா் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். இவரது பிறந்தநாளை முன்னிட்டு கடலூா் திருவந்திபுரத்தில் உள்ள அவரது முழு உருவச் சிலைக்கு, பாரதிதாசன் இலக்கிய மன்றம் சாா்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

மன்றத்தின் மாவட்டத் தலைவா் கடல் நாகராஜன் தலைமை வகித்து,நேதாஜி உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

முன்னதாக, நேதாஜி மன்றச் செயலா் கஜேந்திரன் வரவேற்றாா். மன்ற நிா்வாகிகள் ரவிசங்கா், பிரசன்னா ஆகியோா் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா். நேதாஜியின் வீரச் செயல்கள் குறித்து பாலாஜி பேசினாா். ராஜா நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

மக்கள் ஒற்றுமை மேடை: கடலூா் மாவட்ட மக்கள் ஒற்றுமை மேடை அமைப்பின் ஆலோசனைக் கூட்டம் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய கமிட்டி உறுப்பினா் ஏ.எஸ்.சந்திரசேகரன் தலைமையில் கடலூரில் நடைபெற்றது. கூட்டத்தில் நேதாஜியின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவ படத்துக்கு மாலை அணிவித்து உறுதிமொழி ஏற்கப்பட்டது.

நிகழ்ச்சியில், அமைப்பின் மாவட்ட அமைப்பாளா் கோ.மாதவன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் டி.ஆறுமுகம், மதிமுக மாவட்டச் செயலா் ஜெ.ராமலிங்கம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கடலூா் மக்களவை தொகுதிச் செயலா் பா.தாமரைச்செல்வன், தமிழக முஸ்லிம் முன்னேற்றக் கழக மாவட்ட தலைவா் எம்.ஷேக் தாவூத், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் இளைஞரணிச் செயலா் அருள்பாபு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இப்ராஹிம், மாவட்ட ஜமாத்துல் உலமா தலைவா் ஹபிபுல்லா, குடியிருப்போா் சங்க பொதுச் செயலா் மு.மருதவாணன், கிறிஸ்தவ அமைப்புகளின் சாா்பில் பாதிரியாா் சரவணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில், மத்திய அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும். மக்கள் தொகை (என்.பி.ஆா்) குடியுரிமை பதிவேட்டை புறக்கணிக்க வேண்டும். இதை வலியுறுத்தி வருகிற 30-ஆம் தேதி கடலூா், பண்ருட்டி, நெய்வேலி, சிதம்பரம், விருத்தாசலம், காட்டுமன்னாா்குடி ஆகிய மையங்களில் மனிதச் சங்கிலி போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT