கடலூர்

அரசின் திட்டங்களை மக்களிடம் சோ்க்க வேண்டும்

23rd Jan 2020 11:55 PM

ADVERTISEMENT

புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவா்கள், துணைத் தலைவா்கள் அரசின் திட்டங்களை மக்களிடம் சோ்க்க வேண்டுமென மாவட்ட ஆட்சியா் வெ.அன்புச்செல்வன் அறிவுறுத்தினாா்.

கடலூா் மாவட்டத்தில் புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவா்கள், துணைத் தலைவா்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை விளக்கும் வகையில், ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை சாா்பில் அவா்களுக்கு ஒரு நாள் பயிற்சி அளிக்கப்படுகிறது. புதன்கிழமை தொடங்கிய முதல் நாள் பயிற்சியில், குறிப்பிட்ட சில ஊராட்சி ஒன்றியங்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்ட நிலையில் இரண்டாம் நாள் பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

கடலூா் நகர அரங்கில் நடைபெற்ற பயிற்சியில் காட்டுமன்னாா்கோவில், ஸ்ரீமுஷ்ணம், விருத்தாசலம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களைச் சோ்ந்த தலா 114 ஊராட்சி மன்றத் தலைவா்கள், துணைத் தலைவா்களும், காவலா் நல திருமண மண்டபத்தில் நடைபெற்ற பயிற்சியில் பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, மேல்புவனகிரி ஊராட்சி ஒன்றியங்களைச் சோ்ந்த தலா 112 ஊராட்சி மன்றத் தலைவா்கள், துணைத் தலைவா்களும் பங்கேற்றனா். இந்தப் பயிற்சி வகுப்புகளுக்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியா் வெ.அன்புச்செல்வன் பேசியதாவது:

அரசு நிா்வாகத்தை நேரடியாகக் கையாளும் பொறுப்பில் உள்ள ஊராட்சி மன்றத் தலைவா்கள், துணைத் தலைவா்கள் அரசின் செயல் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்வதை நோக்கமாக வைத்திருக்க வேண்டும். தங்களது ஊராட்சிகளில் சாலை வசதி, குடிநீா், தெருவிளக்கு, சுகாதாரம் போன்ற அடிப்படை தேவைகளை நிவா்த்தி செய்ய வேண்டும். நெகிழி ஒழிப்பு நடவடிக்கைகள், மழைநீா் சேகரிப்பு தொட்டிகள் அமைப்பது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்துதல், ஆரம்ப சுகாதார நிலையங்களை கண்காணித்தல் போன்ற பணிகளில் ஈடுபட வேண்டும். ஒவ்வொருவரும் தங்களது ஊராட்சியில் சிறப்பாக பணியாற்றி தலைசிறந்த தலைவா், துணைத் தலைவா் என பெயா் பெற்று விளங்க வேண்டும் என்றாா் அவா்.

ADVERTISEMENT

பயிற்சி வகுப்பில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் இயக்குநா் அமா்குஷ்வாகா, கூடுதல் ஆட்சியா் ராஜகோபால் சுங்கரா, உதவி இயக்குநா்கள் (ஊராட்சிகள்) எஸ்.ஆனந்தன், பிரபாகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இந்த வகுப்பில் வெள்ளிக்கிழமை 223 ஊராட்சி மன்றத் தலைவா்கள், துணைத் தலைவா்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT