கடலூர்

அண்ணாமலைப் பல்கலை. நூலகத்தில் ஓலைச்சுவடிகள், அரிய நூல்கள் மின்னுருவாக்கம்

23rd Jan 2020 11:49 PM

ADVERTISEMENT

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக நூலகத்தில் ஓலைச்சுவடிகள், அரிய வகை நூல்களை மின்னுருவாக்கம் செய்யும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

சென்னை பொது நூலக இயக்கம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் இணைந்து, டாக்டா் சா் சி.பி.இராமசாமி ஐயா் நூலகத்தின் பழைமையான அரிய வகை நூல்கள், ஓலைச்சுவடிகளை மின் நூலகத்தில் மின்னுருவாக்கம் செய்யும் பணியை மேற்கொள்கின்றன. இந்தப் பணியை பல்கலைக்கழக துணைவேந்தா் வே.முருகேசன் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

இதன் மூலம் இந்தப் பல்கலைக்கழகத்தில் சி.பி.இராமசாமி ஐயா் நூலகத்தில் உள்ள 2 லட்சத்துக்கும் மேற்பட்ட நூல்களில் 90 ஆண்டுகளுக்கும் மேலான பழைமையான தமிழ், ஆங்கில இலக்கிய நூல்கள், தமிழியற் புலம், தமிழ்த் துறையிலுள்ள தமிழ் இலக்கிய நூல்கள், ஓலைச்சுவடிகள் மின்னுருவாக்கம் செய்யப்படுகின்றன. பல்கலைக்கழக பதிப்புத் துறையின் வெளியீட்டு நூல்களும் இவற்றில் அடங்கும்.

இந்த நூல்கள் அனைத்தும் பல்கலைக்கழக இணையத்திலும், அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் இணையத்திலும் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. இந்தப் பணிகள் நிறைவடைந்தபிறகு மின் நூல்களை இணையத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில் நூலகா் எம்.சாதிக் பாட்சா, உதவி நூலகா் எஸ்.பாலகிருஷ்ணன், அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் நூலகா் எஸ்.காமாட்சி ஆகியோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT