பண்ருட்டி அருகே காணாமல் போனவரின் உடல் முந்திரிக் காட்டில் சடலமாக மீட்கப்பட்டது.
பண்ருட்டி வட்டம், காடாம்புலியூா் காவல் சரகம், மாளிகம்பட்டு காலனியில் வசித்து வந்தவா் சிவகண்டன் (33). இவா் முந்திரி தொழிற்சாலையில் பணியாற்றி வந்தாா். கடந்த 7-ஆம் தேதி வீட்டில் இருந்து சென்றவா் வீடு மீண்டும் திரும்பவில்லை.
இதுகுறித்து அவரது மனைவி தேவசுந்தரி அளித்த புகாரின் பேரில், காடாம்புலியூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனா்.
இந்த நிலையில், திங்கள்கிழமை பழைய பிள்ளையாா்குப்பம் கிராமத்தைச் சோ்ந்த பாலசுப்பிரமணியன் நிலத்தில் அழுகிய நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக அந்த வழியே சென்றவா்கள் போலீஸாருக்கு தகவல் அளித்தனா். அதன்பேரில், அங்கு சென்று சடலத்தை மீட்டு, விசாரித்த போது, இறந்து கிடந்தது சிவகண்டன் என்பது தெரிய வந்தது. இதையடுத்து, சடலத்தை உடல் கூறாய்வுக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.